india

img

விலைவாசி உயர்விற்கு எதிராக மே 25-31 தேதிகளில் கண்டன இயக்கங்களை நடத்திடுக-இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துவரும் விலைவாசிக்குஎதிராகவும், வேலையின்மைக்கு எதிராகவும் வரும் மே 25 – 31 தேதிகளில் அகில இந்திய அளவில் கண்டன முழக்கங்களை எழுப்புமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர்  தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் விடுத்திருக்கும் அறைகூவல் பின்வருமாறு:

எவ்விதமானக் கட்டுப்பாடுமின்றி பாய்ச்சல் வேகத்தில் விலைவாசி அதிகரித்துக்கொண்டிருப்பது, சாமானிய மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றி இருக்கிறது. கோடானுகோடி மக்கள் வறுமைக் குழிக்குள் தள்ளப்பட்டு, பசி-பட்டினிக் கொடுமைக்க ஆளாகி இருக்கிறார்கள். அதேபோன்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. இவை இரண்டும் சேர்ந்து மக்களின் துன்பதுயரங்களைப் பெருக்கியுள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் 70 விழுக்காடும், காய்கறிகளின் விலைகள் 20 விழுக்காடும், சமையல் எண்ணெய்களின் விலைகள்  23 விழுக்காடும், தானியங்களின் விலைகள் 8 விழுக்காடும் உயர்ந்திருக்கின்றன. இந்திய மக்களில் கோடானுகோடி மக்களின் பிரதான உணவாக விளங்கும் கோதுமையின் விலை உயர்வு 14 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து, சாமானிய மக்களால் வாங்கமுடியாத நிலைக்குச் சென்றுள்ளது. கோதுமை கொள்முதல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒன்றிய அரசு சென்ற ஆண்டு கொள்முதல் செய்ததைவிடப் பாதிக்கும் குறைவாகவே இந்த ஆண்டு கொள்முதல் செய்திருக்கிறது. கொள்முதல் இலக்காக 44.4 மெட்ரிக் டன்களை நிர்ணயித்துள்ளபோதிலும் ஒன்றிய அரசு இதுவரை கொள்முதல் செய்துள்ள அளவு 20 மெட்ரிக் டன்களைக்கூட எய்திடவில்லை.

தொடர்ந்து உயர்த்திக்கொண்டிருக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும், கோதுமைப் பற்றாக்குறையும் ஒட்டுமொத்த பணவீக்கத்தை உந்தித்தள்ளியிருக்கிறது.  நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து மின்கட்டணமும் உயர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் இடதுசாரிக் கட்சிகள், பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்துள்ள அனைத்து செஸ் மற்றும் சர்சார்ஜ் வரிகளையும் ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், விலை உயர்வுகளை, குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோருகின்றன. பொது விநியோக முறையில் கோதுமை விநியோகத்தை மீளவும் அளித்திட வேண்டும். இத்தகைய விலைவாசியைக் கட்டுப்படுத்திட பொது விநியோக முறையை வலுப்படுத்திட வேண்டும்.

·        பெட்ரோலியப் பொருட்களின் மீதான அனைத்து செஸ் மற்றும் சர்சார்ஜ் வரிகளையும் ரத்து செய்க.

·        பொது விநியோக முறை மூலமாக கோதுமை விநியோகத்தை மீளவும் அளித்திடுக.

·        அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும், குறிப்பாக தான்யங்கள் மற்றும் சமையல் எண்ணெய் முதலியவற்றை பொது விநியோக முறை மூலம் விநியோகிப்பதன் மூலம் பொது விநியோக முறையை வலுப்படுத்துக. 

·        வருமான வரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவிப் பணம் நேரடியாக ரொக்கமாக அளித்திடுக.

·        மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்திடுக. வேலையில்லாதவர்களுக்கு நிவாரண உதவி (allowance) அளிப்பதற்காக ஒன்றிய அரசின்கீழான திட்டத்தைக் கொண்டுவருக. (Legislate Central scheme for unemployment allowance.)

·        நகர்ப்புறங்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தைக் கொண்டுவருக.

·        காலியாகவுள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பிடுக.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

மே 25-31 தேதிகளுக்கிடையே நடைபெறும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெறும் இப்போராட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் கீழ் உள்ள அனைத்துக் கிளைகளும் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன. இவ்வாறு இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

(ந.நி.)

 

;