india

img

தத்துவார்த்த ஆசான் தோழர் எம். பசவபுன்னையா....

தோழர்  எம். பசவபுன்னையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் களில் ஒருவர்.  அவரது தலைமுறையைச் சேர்ந்த பல தலைவர்களைப்போலவே அவரும், நம் நாட்டில்கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பல முனைகளிலும் பங்களிப்பினைச் செய்துள்ளார். அவரது காலத்திலிருந்த பல தலைவர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்தோ அல்லதுகாங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்தோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்கள். ஆனால், தோழர் எம். பசவபுன்னையா, 1934ல் அவர் மாணவர் இயக்கப் போராளியாக இருந்தபோதே நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.பசவபுன்னையா ஆந்திரப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியிலும், வீரஞ்செறிந்த தெலுங்கானாவிவசாயிகள் ஆயுதப் போராட்டத்தினைத் தலைமையேற்று நடத்தியதிலும் மிக முக்கியமான பங்கினை வகித்தார். அதன்பின்னர் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டத்திலும், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉருவானதிலும் அவர் மிக முக்கிய பங்களிப்பினைச் செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாட்டை மிகக்கூர்மையாகச் செதுக்கியதிலும் அவரது பங்களிப்புத் தன்னிகரற்றதாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது அகில இந்திய மாநாடு 1964 அக்டோபர் 31க்கும் நவம்பர் 7க்கும்இடையே கொல்கத்தாவில் நடைபெற்றது. வரைவு கட்சித்திட்டம் தோழர் பசவபுன்னையா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு அறிமுகப்படுத்தி உரையாற்றுகையில் அவர், கட்சித் திட்டத்தின் சாராம்சங்களை விளக்கி உரையாற்றினார். இந்திய சமூகத்தின் வர்க்கங்களை ஆய்வு செய்தும், புரட்சியின் கட்டம் குறித்தும், இந்தியஅரசின் வர்க்கத்தன்மை குறித்தும், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில்  மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தும்போது அது யார் யாரையெல்லாம் தன் வர்க்கக் கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையெல் லாம் அவர் தெளிவுபடுத்தினார். இந்திய அரசு என்பது பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவக் கூட்டணி அரசு என்பதையும்,  மக்கள் ஜனநாயகமுன்னணியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத்திடம்தான் இருந்திட வேண்டும் என்பதையும், தற்போதுள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய நிதி மூலதனத்துடன் வேகவேகமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இடது அதிதீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே, நக்சலிசம் வடிவத்தில் உருவான இடது அதிதீவிரவாத சவாலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதில் பெரும் பாதிப்பு ஆந்திராவில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சீனாவில் ‘கலாச்சாரப் புரட்சி’ நடந்து கொண்டிருந்தது. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆயுதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டதை அடுத்து ஆந்திராவில் இருந்த கட்சி முன்னணி ஊழியர்களும் தலைவர்களும் பெருமளவில் ஈர்க்கப்பட்டார்கள்.  இவ்வாறு ஏற்பட்ட இடது அதிதீவிரவாத திரிபுக்கு  எதிரான போராட்டத்தையும் தோழர் பசவபுன்னையா நடத்தினார்.  கட்சியின் சார்பில் 1968இல் பர்துவானில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான பிளீனம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஆந்திராவில் மாநில அளவிலான பிளீனம் நடைபெற்றது. இதில் இடது அதிதீவிரவாத திரிபுக்கு எதிரான போராட்டத்தை மிகச் சரியான முறையில் பி.சுந்தரய்யாவுடன் இணைந்து நின்று பசவபுன்னையா நடத்தினார். பின்னர் பர்துவானில் நடைபெற்ற பிளீனத்தின்போதும்  பசவபுன்னையா ஆந்திராவிலிருந்து வந்திருந்த தலைவர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்ட இடது அதிதீவிர நிலைப்பாட்டினை எதிர்த்து  முறியடித்தார். அப்போது கட்சியால் பர்துவான் பீளீனத்தில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது வலது திருத்தல்வாதம் மற்றும் இடது அதிதீவிரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக கட்சி மேற்கொண்ட தத்துவார்த்தப் போராட்டத்திற்கு இன்றளவும் அடிப்படையாக இருந்து வருகிறது.

சர்வதேச அளவில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடது அதிதீவிரவாத நிலைப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டத்தை நடத்துவதற்கான பொறுப்பை பசவபுன்னையா எடுத்துக்கொண்டார். சமூக முரண்பாடுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே சமாதான முறையில் போட்டியை ஏற்படுத்தி, சோசலிசத்தை சமாதானமான முறையிலேயே அடைய முடியும் என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற்காலத் தலைமை மேற்கொண்ட திருத்தல்வாத சிந்தனைகளை வேரறுக்கும் அறுவைக் கத்தியாக பசவபுன்னையா தன் பேனாவை உபயோகித்தார்.

அதேபோன்று கலாச்சாரப் புரட்சி காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடது அதிதீவிர நிலைப்பாடுகள் பலவற்றையும் பசவzன்னையா கடுமையாக எதிர்த்தார்.சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த “மூன்றுலகக் கோட்பாடு”, சோவியத் யூனியனை “சமூக ஏகாதிபத்தியவாதி” என்று சித்தரித்தது மற்றும் பல நாடுகளிலும் உள்ள நிலைகளின் தன்மைகளைப் புரிந்துகொள்ளாமல் அல்லது அதனைப்பற்றிக் கவலைப்படாமல் ஆயுதப் போராட்டத்திற்காக இடது அதிதீவிர அறைகூவல் விடுத்தது ஆகியவை இதில் அடங்கும்.  

இதேபோன்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளது தவறான கொள்கைகளுக்கு எதிரான நிலையினைமேற்கொண்ட அதே சமயத்தில், சோவியத் எதிர்ப்புஅல்லது சீன எதிர்ப்பு நிலைப்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதிலும் பசவபுன்னையா மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். இரு நாடுகளுமே மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் நிலைப்பாடுகளிலிருந்தும், சோசலிசத்தைக் கட்டுவதற்கான விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறையிலிருந்தும்  விலகிச் சென்றுள்ளபோதிலும், அவை இரண்டும் சோசலிச நாடுகள்தான் என்பதிலும் மிக உறுதியாக இருந்தார். 

இந்தியா போன்ற புதிய சுதந்திர நாடுகள் தங்களுடைய வளர்ச்சிக்கு முதலாளித்துவமற்ற பாதையைப் பின்பற்றலாம் என்று கூறிய சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை பசவபுன்னையா மிகவும் நாசூக்கான முறையில் நிராகரித்தார். அதேபோன்று இந்தியாவில் ஏற்பட்டுவந்த முதலாளித்துவ வளர்ச்சியின் குணம் குறித்து நக்சலைட்டுகள் முன்வைத்த வறட்டுத்தனமான புரிந்துணர்வையும் எதிர்த்துத் தவிடுபொடியாக்கினார். அவர் எழுதிய “ஆந்திரா தோழர்களுக்கான கடிதம்” இவற்றை நன்கு விளக்குகிறது.

இந்தியாவில் உள்ள முதலாளித்துவம் தரகு முதலாளித்துவம் என்று நக்சலைட்டுகள் கூறிவந்ததையும் அவர் தவிடுபொடியாக்கினார். மற்ற  ஜனநாயகக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து போராட வேண்டும் என்பதனை அவர் உயர்த்திப்பிடித்தார். அதேபோன்று நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்கும் மற்றும் 1967களில் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அமைக்கப்பெற்ற கூட்டணி அரசாங்கங்களுக்கும் எதிரான இடது அதிதீவிரவாத நிலைப்பாட்டையும் அவர் கண்டித்தார்.

தேசிய இனப்பிரச்சனை
1978இல் கட்சியின் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்றபின் தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அதில் எழுதி வந்தார். கட்சித் திட்டம் உருவாக்கப்பட்ட சமயத்தில் எழுந்த விவாதங்களின்போது இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனை குறித்து பின்னர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில், பல்வேறு மொழி பேசுகின்ற தேசிய இனங்களுக்கான பங்கு என்ன? இது தொடர்பாக 1972இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதங்கள் நடைபெற்றன. “தேசிய இனப்பிரச்சனை மீதான குறிப்பு”  மாநாட்டில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய மாநாட்டில் இதற்கான ஆவணத்தை பசவபுன்னையா அறிமுகப்படுத்தி உரைநிகழ்த்தினார். அப்போது அவர் ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பிருந்த நிலைக்கும், இந்தியாவில் நாம் அதிலிருந்து எப்படியெல்லாம் வேறுபடுகிறோம் என்பதையும் மிகவும் தெளிவாக முன்வைத்தார்.  

“ஜார் ஆட்சி காலத்தில் அங்கிருந்த பல்வேறு தேசியஇனங்கள், வெள்ளை ரஷ்ய தேசிய இனத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருந்தன. ஆனால் இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு. இங்கே எந்த தேசிய இனமும், மற்றொரு தேசிய இனத்தை அடக்கி ஆளவில்லை. இரண்டாவதாக, இந்தியாவின் ஆளும் வர்க்கம்,முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கம், பல்வேறு மொழிபேசும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டுக் கலவையாகும். இந்த ஆளும் வர்க்கம்தான் பல்வேறு மொழிபேசும்பல்வேறு தேசிய இன உழைக்கும் வர்க்கத்தினரையும் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. அதன்மூலம் ஒரு பொதுவான வர்க்க ஒடுக்குமுறையை அவர்கள் மீது ஏவிக்கொண்டிருக்கின்றன. எனவே, இந்தியாவில் தனித்துப் பிரிந்து செல்ல வேண்டுமென்கிற அறைகூவல் நாட்டில்உழைக்கும் மக்களுக்கு எதிராக நடந்துவரும் ஒடுக்குமுறைக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி, போராட்டத்தில் இறக்குவதற்கு ஊறு விளைவித்திடும். தொழிலாளர் வர்க்கக் கட்சியின் பணி என்பது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பொதுவான வர்க்க சுரண்டலுக்கு எதிராக அனைத்து மொழி மற்றும் தேசிய இனங்களின் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டுவதாகத்தான் இருக்க வேண்டும்” - என்று விளக்கினார் பசவ புன்னையா.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,   கட்சித் திட்டத்தில்முன்வைத்துள்ள பிரச்சனைகள் மீது தத்துவார்த்தரீதியாக ஒரு நீண்ட நெடிய உள்கட்சிப் போராட்டத்தை மேற்கொண்டுஉருவான கட்சியாகும். கட்சி உருவானபின்பு அதன்மீதுசோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தவறாக மேற்கொண்ட நிலைப்பாடுகளையும் முறியடித்து வளர்ந்த கட்சியாகும். இது எப்படி சாத்தியமானது?கட்சி, இந்திய நிலைமைகளுக்கேற்ப மார்க்சிய - லெனினிசத்தை மிகச் சரியான முறையில் பொருத்தி முன்னேறியதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு கட்சியை முன்னெடுத்துச் சென்றதில் தோழர் எம். பசவபுன்னையா விற்கு மகத்தான பங்கு உண்டு.

தோழர் எம்.பசவபுன்னையா 1992ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் நாள் மறைந்தார்.

கட்டுரையாளர் : பெரணமல்லூர் சேகரன்
 

;