லக்னோ:
ராமர் கோயிலையொட்டிய 1.3 லட்சம் சதுர அடி கொண்ட சுமார் 3 ஏக்கர்நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கியதில், அறக்கட்டளை உறுப்பினர்கள் ரூ. 16 கோடியே 50 லட்சம்பணத்தை முறைகேடு செய்திருப்பதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இதுதொடர்பான ஆதாரங்களை வெளிக் கொண்டு வந்துள்ளன.அயோத்தி தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வும், சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான பவன்பாண்டே, அயோத்தியில் செய்தியாளர்கள் முன்பாக இந்த ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது, ராமர் கோயிலுக்கு அடுத்துள்ள 3 ஏக்கர் நிலத்தை, 2021 மார்ச் 18 அன்று இரவு 7:10 க்கு, குசும்பதக் என்பவரிடம் இருந்து 2 கோடிரூபாய்க்கு சுல்தான் அன்சாரி என்பவர் விலைக்கு வாங்க, அடுத்த ஐந்தேநிமிடத்தில், 7:15 மணிக்கு அதே நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு சுல்தான் அன்சாரியிடமிருந்து ராமர் கோயில் அறக்கட்டளை விலைக்கு வாங்கியிருக்கிறது. பதிவுத்துறை தரவுகளின் படி இந்த நிலத்தின் சந்தை மதிப்பு 5.7 கோடி ரூபாய் என்ற நிலையில், அதனை வெறும் 2 கோடி ரூபாய்க்கு சுல்தான் அன்சாரி வாங்க, அதையே 18 கோடியே50 லட்சம் கொடுத்து ராமர் கோயில்அறக்கட்டளை வாங்கியுள்ளது.
இதில் தான் மிகப்பெரிய அளவிற்கு பணம் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு கைமாறியிருப்பதாக பவன் பாண்ட சந்தேகம் எழுப்பியுள்ளார்.இ-பதிவு முறையில் இதற்கான பத்திரப்பதிவு நடந்துள்ள நிலையில், இந்த பத்திரப்புதிவுக்காக, 5:22-க்குவாங்கப்பட்ட முத்திரைத் தாளில் இந்த நிலத்தை குசும் பதக் 2 கோடிரூபாய்க்கு சுல்தான் அன்சாரிக்கு விற்பனை செய்ததாக குறிப்பிடப்பட் டிருக்கிறது. ஆனால், அதற்கு சுமார்பத்து நிமிடம் முன்னதாக 5:11 மணிக்கே வாங்கப்பட்ட முத்திரைத் தாளில் சுல்தான் அன்சாரி இந்த நிலத்தை18.5 கோடி ரூபாய்க்கு ராமர் கோயில்அறக்கட்டளைக்கு விற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த இரண்டு ஆவணங்களிலுமே ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ராவும், அயோத்தி நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயாவும் சாட்சிக் கையெழுத்திட்டு உள்ளனர்.இந்த நிலத்தை ராமர் கோயில்அறக்கட்டளைக்கு விற்ற சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி என்பவருடன் கூட்டுச்சேர்ந்து, அயோத்தியில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். இதில், அன்சாரியின் கூட்டாளியான ரவி மோகன், அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயாவின் நெருங்கியஉறவினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் ஆதாரப் பூர்வமாக வெளியிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் பவன் பாண்டே, “ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வாங்கப்பட்ட சொத்தின் விலை 5 நிமிடங்களில் எப்படி, ரூ. 2 கோடியிலிருந்து ரூ. 18.5 கோடிக்குச் சென்றது?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், “ராமர் கோயில் அறக்கட் டளைக்கு கோடிக்கணக்கான மக்கள் நன்கொடைகளை வழங்கினர். அவர்கள் தங்கள் சேமிப்புகளைத்தான் நன்கொடையாக அள்ளிக் கொடுத்தனர். அந்த நன் கொடையை கையாடல் செய்தது, நாட்டின் 120 கோடி மக்களையும் அவமதிக்கும் செயல்” என்றும், 16 கோடியே 50 லட்சம் ரூபாய் பக்தர்களின் நன்கொடை முறைகேடு செய்யப்பட்டிருப்பது பற்றி சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண் டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆம் ஆத்மி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்-கும் தனியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதே குற்றச் சாட்டுகளை எழுப்பியுள்ளார்.“ராமர் பகவான் பெயரில் ஊழல்இருக்கும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால்இந்த ஆவணங்கள், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதைக் காட்டுகின்றன” என்று தெரிவித்துள் ளார்.பவன் பாண்டே, சஞ்சய் சிங் ஆகியோரின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,இவை கருத்து தெரிவிக்கக்கூட தகுதியற்றவை என்று அறக்கட்டளை நிர்வாகம் குற்றச்சாட்டை நிராகரித்துள் ளது.
“ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகஎங்கள் மீது அனைத்து வகையானகுற்றச்சாட்டுகளும் முன்வைக்கப் பட்டு விட்டன. மகாத்மா காந்தியின்படுகொலைக்கும் கூட சிலர் எங் களை குற்றம் சாட்டினர். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் கவலைப்பட மாட்டோம்” என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைச் செயலாளரும் விஎச்பி தலைவருமான சம்பத் ராய் மழுப்பியுள்ளார்.எனினும், ரூ. 16.5 கோடி தொடர்பான குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு, அதற்கு என்ன பதில்? என்று செய்தியாளர்கள் கிடுக்கிப்பிடியாக கேட்டதற்கு, “முதலில் அந்த குற்றச்சாட்டை படித்துவிட்டு சொல்கிறேன்”என்று கூறி பின்வாங்கியுள்ளார்.ராமர் கோயில் கட்டுவதற்காக வசூலிக்கப்பட்ட நன்கொடையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் ரூ. 16.5 கோடியை அபகரித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் ராம பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.