புதுதில்லி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் வேலைகளை நோக்கி இளம் வயதினர் வருவது அதிகரித்துள்ளது. இது கிராமப்புறங்களில் உள்ள விவசாய நெருக்கடியையும், வேலையில்லாக் கொடுமையையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் வயது தொடர்பாக வெளியாகியுள்ள தரவு ஆய்வு செய்யப்பட்டதில், 2017-18நிதியாண்டில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடையேயான இளம் வயதினர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனைக் காட்டுகிறது. இவ்வயதில் பணியாற்றியோர் எண்ணிக்கை 2013-14இல் 1 கோடிக்கும் அதிகமாக இருந்தது. பின்னர் அது 2017-18இல் 58.69 லட்சமாகக் குறைந்தது. எனினும் 2018-19இல் மீண்டும் அதிகரித்து இப்போது 70.71 லட்சமாக மாறியிருக்கிறது.இவ்வாறு இளம் வயதினர் இவ்வேலைக்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2019 அக்டோபர் 21 தேதி வரையிலும் இவர்களின் எண்ணிக்கை 57.57 லட்சமாகும்.
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகிய அரசின் நடவடிக்கைகளுக்குப் பின்னர்தான் இளம் வயதினர் இவ்வேலைக்கு வருவது அதிகரித்திருக்கிறது.2013-14இல் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களில் இளம் வயதினர் 13.64 சதவீதமாகும். பின்னர் 2017-18இல் இது 7.73 சதவீதமாகக் குறைந்தது. பின்னர் இது 2018-19இல் 9.1 சதவீதமாகவும், 2019-20இல் 10.06 சதவீதமாகவும் உயர்ந்தது. “பொருளாதார மந்தம் காரணமாக இளம் வயதினருக்கான எதிர்காலம் மிகவும் இருள்சூழ்ந்ததாக இருக்கிறது. இவர்கள் கல்வித்தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. எனவே, மகாத்மா காந்தி தேசிய கிராமைப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழான வேலைக்கு வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்,” என்று மஸ்தூர் கிசான் சக்தி சங்காதான் என்னும் அரசு சாரா நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர் நிகில் டே கூறுகிறார். மேலும் இத்திட்டத்தின் கீழ் வேலைதேடி வரும் நபர்களின் எண்ணிக்கையும் சமீபகாலங்களில் அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, 2013-14இல் 7.95 கோடி பேர் வேலை பார்த்திருக்கிறார்கள். இப்போது 2014-15இல் இது 6.71 கோடியாக குறைந்தபோதிலும், 2015-16இல் மீண்டும் 7.21 கோடியாகவும், 2016-17இல் 7.76 கோடியாகவும் அதிகரித்தது.நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 21 ஆம் தேதி வரையிலுமே வேலை பார்ப்போர் எண்ணிக்கை 5.72 கோடியாகும்.தொழிலாளர்களில் 18-30 வயதுக்கு இடைப்பட்ட இளம் வயதினர் என்பது, அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தில் சேரும் ஆரம்ப நிலையாகும். இவர்களுக்கு தங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல், குறைந்தபட்ச ஊதியமாக இருந்தாலும் பரவாயில்லை என, இத்திட்டத்தினை நோக்கி வருவதென்பது, நாட்டின் பொருளாதாரத்தின் மோசமான நிலைமையினைக் காட்டும் எச்சரிக்கை மணியாகும். எனவேதான் ஆய்வாளர்கள் இதனைக் கண்டு மிகவும் கவலை தெரிவித்திருக்கின்றனர். (ந.நி.)