india

img

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் ஓய்வு!

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான கே.எம்.ஜோசப் நேற்றுடன் (ஜூன் 16) பணி ஓய்வு பெற்றார். 

நீதிபதி கே.எம்.ஜோசப், கடந்த 1982 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து தில்லி உயர்நீதிமன்றத்தில் பயிற்சியைத் தொடங்கினார். கடந்த 2004 ஆம் ஆண்டு, கேரள உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் 9 வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2016-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக 9 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி பாஜகவில் இணைந்தனர். இதை தொடர்ந்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில், உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கே.எம்.ஜோசப் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தகர்த்து, கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். பின்னர், ஜல்லிக்கட்டு, பில்கிஸ் பானு வழக்கு, குட்கா, ராஜேந்திர பாலாஜி, கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் நீதிபதி கே.எம்.ஜோசப் தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி கே.எம்.ஜோசப் நேற்றுடன் (ஜூன் 16) பணி ஓய்வு பெற்றார்.