காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை சந்திக்க அவரது மகள் சனா இல்திஜா ஜாவேதுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தான 370, 35ஏ ஆகிய பிரிவுகளை, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்து, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், அப்பகுதியில் 50,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்தது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மெகபூபா முப்தியின் மகள் சனா இல்திஜா ஜாவேத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தனது தாயாரை சந்திக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். ஒரு மாத காலமாக வீட்டுக்காவலில் உள்ள எனது தாயாரின் உடல்நிலை பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என இல்திஜா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இவரது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், மெகபூபா முப்தியை சந்திக்க அனுமதி அளித்துள்ளது.