முசாபர்பூர் காப்பக பாலியல் வழக்கில் பிரிஜேஷ் தாக்கூர் மற்றும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில், பீகார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தக் காப்பகம் குறித்து ஆய்வு நடத்திய டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம், இந்தக் காப்பகத்தில் ஏராளமான சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார்கள் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு, மே 26-ஆம் தேதி பீகார் அரசுக்கு அறிக்கை அனுப்பியது.
இதைத் தொடர்ந்து பீகார் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு காப்பகத்தில் உள்ள சிறுமிகளை அரசு காப்பகத்துக்கு மாற்றியது. முதல் கட்டமாக பிரிஜேஷ் தாக்கூர், காப்பக ஊழியர்கள் என 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், பீகார் போலீஸார் விசாரிப்பதில் மனநிறைவு இல்லை எனக் கூறி சிபிஐக்கு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், விசாரணையை பீகார் நீதிமன்றத்தில் இருந்து தில்லியில் சாஹேத்தில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா தலைமையில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேர் மீதும் தில்லி போக்ஸோ நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை, குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையில், 20 பேரில் ஒருவரை வழக்கில் இருந்து விடுவித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 19 பேர் குற்றவாளிகள் என தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிஜேஷ் தாக்கூரை முக்கிய குற்றவாளியாக அறிவித்துள்ள நீதிமன்றம், 10 பெண்கள் உள்பட 19 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. மேலும், தண்டனையின் அளவு குறித்த வாதங்களை ஜனவரி 28-ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், முசாபர்பூர் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.