india

img

மோடியின் தொண்டராக மாறிய உச்சநீதிமன்ற நீதிபதி மிஸ்ரா.... ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்

புதுதில்லி:
பிரதமர் மோடியின் புகழ்பாடிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தில்லி உச்சநீதிமன்ற வளாகத்தில்சர்வதேச நீதித்துறை மாநாடு, பிப்ரவரி22, 23 தேதிகளில் நடைபெற்றது. பிரதமர் மோடி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, “மோடி சர்வதேச அளவில் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்; பன்முகத்திறன் கொண்ட அறிவாளி” என்று பலவாறாகபுகழ்ந்து தள்ளினார். நீதிபதி மிஸ்ராவின் பேச்சு, மேடையிலேயே பலரை நெளிய வைத்தது.தற்போது, அவரின் இந்த பேச்சுக்குவெளிப்படையாக எதிர்ப்பு எழுந்துள்ளது. “தேசத்தின் மிக முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் பிரதமரை புகழ்ந்து பேசுவது தேவையற்றது. இதுபோல செயல்களால் நீதித் துறைக்கு களங்கம் ஏற்படும். நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும்” என விமர்சனங்கள் வந்துள்ளன.நீதித்துறையின் முக்கிய பொறுப் பில் இருப்பவர்கள், தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பணியாற்ற வேண்டும் எனும் முக்கியமான விதி இருக்கையில், நீதிபதி மிஸ்ரா அதனை மீறிவிட்டார்; நீதித்துறைக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டார் என்று குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. மோடி குறித்த அருண்மிஸ்ராவின் கருத்து இந்தாண்டின் மிகச் சிறந்த காமெடி என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சாவந்த் தெரிவித்துள்ளார்.