பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கு சிபிஎம் ஆதரவு அளித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்கள் 9 இடங்களில் கவனமாகவும், குறிப்பிட்ட அளவிலும், தீவிரப்படுத்தாமலும் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசால் கூட்டப்பட்ட அனைத்து கட்சிக்கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கு, சிபிஎம் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
இந்த நடவடிக்கைகளுடன், பஹல்காமில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்களை ஒப்படைக்கவும், பயங்கரவாத முகாம்களும் அதன் பிரதேசத்தில் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பாகிஸ்தான் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்திய மக்களின் ஒற்றுமையும், நாட்டின் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.