புதுதில்லி,பிப்.27- அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவிகளைக் கொடூரமாக ஏபிவிபி அமைப்பினர் தாக்கிய வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சிவராத்திரி தினத்தனமான நேற்று பல்கலைக்கழக உணவகத்தில் வழக்கம்போல் உணவருந்திக்கொண்டிருந்த மாணவிகளை, அசைவம் சாப்பிட்டதற்காகத் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஏபிவிபி அமைப்பினர் கடுமையாக்கத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தட்டிக் கேட்ட மாணவர் சங்கத்தினரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக்கழக உணவகத்தில் அசைவ உணவு வழங்கக்கூடாது என்ற ஏபிவிபியின் ஜனநாயக விரோத கோரிக்கையை நிறைவேற்றாததால் மாணவர்கள் மீது ஏபிவிபியினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக உணவகம் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான இடமாகும். மேலும் எந்தவொரு சமூகத்தின் உணவுப் பழக்கவழக்கங்களையும் மற்ற மாணவர் சமூகத்தின் மீது திணிப்பது ஜனநாயக விரோதமானது மற்றும் மதச்சார்பற்றது.
ஏபிவிபி குண்டர்கள் மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுக்கும் காட்சிகள் காணொலியில் இடம்பெற்றுள்ளது. அசைவ உணவு பரிமாறிய உணவக ஊழியர்களையும் அவர்கள் தாக்கினர்.
மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது தெற்காசிய பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.