மும்பை:
மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் தில்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் உறுதி மிக்கப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இது உலகளாவிய கவனத்தையும், கிரேட்டா தன்பெர்க், ரிஹானா, மீனா ஹாரிஸ், மியா கலீபா உள்ளிட்ட உலக பிரபலங்களின் ஆதரவையும் பெற்றுவரும் நிலையில், அதனை திசைத்திருப்பும் வகையில்- விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக லதா மங்கேஷ்கர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான்,சச்சின் டெண்டுல்கர், கோலி, கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட பாலிவுட் திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து டுவிட்டரில் பதிவிட்டனர்.
இந்த திடீர் டுவீட்டுகள் நாட்டுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.இதனை அவர்களாக செய்யவில்லை. மத்திய பாஜக அரசுதான் அவர்களைத் தூண்டிவிட்டு டுவீட் போட வைத்துள்ளது என்று பலரும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி னர்.இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆதரவு நிலையெடுத்த மகாராஷ்டிர நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவும், இப்பிரச்சனையில் பாஜக-வை விமர்சித்துள்ளார்.“மத்திய ஆளும் பாஜக அரசு, ‘பாரத ரத்னா’ விருது பெற்ற லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நிர்ப்பந்தப்படுத்தி, ரிஹானாவுக்கு எதிராக டுவீட் போட வைத்துள்ளது. இதுபோல தேசிய அடையாளம் கொண்டோரை அரசு தங்கள் விளம்பரத்துக்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அக்ஷய் குமார் போன்ற நடிகர்கள் வேண்டுமானால், இந்தபணிக்குப் பொருத்தமாக இருப்பார்கள்.மாறாக, பாஜக செய்த செயலால், லதா மங்கேஷ்கரும், சச்சின் டெண்டுல்கரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அவர்கள் மக்களின் கிண்டலுக்கும் உள்ளாகின்றனர். இதற்கு மோடி அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று ராஜ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.