பெங்களூரு:
கர்நாடக மாநில அரசுப் பணிகளில், திருநங்கையர் உள்ளிட்ட மாற்றுப்பாலினத்தவர்களுக்கு 1 சதவிகிதம் உள்ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.நேரடி பணி நியமனங்கள் அனைத்திலும், இந்த விதி அமல்படுத்தப்படும் என்பதுடன், இந்த உள்ஒதுக்கீடு அறிவிப்பு, பொதுப்பிரிவின் கீழ் வருபவர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள், இதர பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் என அனைத்துப் பிரிவினை சேர்ந்தவருக்கும் பொருந்தும் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.ஒன்றிய அரசு 2019-ஆம் ஆண்டில் ஏற்படுத்திய திருநங்கையர்க்கான சட்டத்தின்படி, கர்நாடக அரசும் திருநங்கையரை வகைப்படுத்தும். அந்தச் சட்டத்தில், திருநங்கை என்பவர் பிறப்புச் சான்றிதழுடன் ஒத்துப்போகமாட்டார்; திருநங்கையாகவோ திருநம்பியாகவோ, க்யூர் ஜெண்டரை சேர்ந்தவராகவோ, இருபாலின தன்மையும் கொண்டவராகவோ அல்லது கின்னர் - ஹிஜ்ரா - அரவாணி - ஜோக்தா போன்ற சமூக கலாச்சார அடையாளங்களை கொண்டவராகவோ இருப்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி 1977 கர்நாடக அரசுப் பணியிடங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளில் 9-ஆவது விதியை திருத்தம் செய்ததன் வழியாக, இந்த உள்ஒதுக்கீடு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.