புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமாக உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதுடன், பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.
தடுப்பூசி மட்டுமே கொரோனாவிலிருந்து தப்பிக்க வழி என்று உலக நாடுகள் கூறிவரும் நிலையில், மத்திய பாஜக அரசின் செயலற்ற தன்மையால், அதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு, தற்போது தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமுடக்கத்தை தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது.அத்தியாவசியத் துறைகள் தவிர மற்ற துறைகள் இயங்க, பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் வர்த்தகம், உற்பத்தி சார்ந்த சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டு, பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் கடும் வறுமையை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், வேலையின்மை விகிதம் மேலும் மேலும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக, இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) எச்சரித்துள்ளது.
மார்ச் மாதம் 6.50 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாத முடிவில் 7.97 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. தற்போது, அது மே 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இது கடந்த ஓராண்டில் இல்லாத அதிகபட்ச வேலையின்மை என்பது குறிப்பிடத் தக்கது.மே 19 வரையிலான கடந்த 30 நாட்களில் மட்டும் நாட்டின் வேலையின்மை விகிதம் 9.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது; இது நகர்ப்புறத்தில் 11.8 சதவிகிதமாகவும், கிராமப்புறத்தில் 8.8 சதவிகிதமாகவும் உள்ளது.நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே 1 அன்று 9.60 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் மே 19 அன்று 11.77 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.கொரோனா முதல் அலைக்குப் பிறகு, நிலைமை சற்று மேம்பட்டு வந்தது. ஆனால், 2-ஆவது அலை, கடந்த 6 மாதத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு, வளர்ச்சியையும் முழுமையாக பறித்துக் கொண்டு விட்டது என்று இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) குறிப்பிட்டுள்ளது.
****************
ஆசியாவிலேயே 2-வது பெரிய பணக்காரர் ஆனார் அதானி... ஒரே ஆண்டில் 32.7 பில்லியன் டாலர் சொத்து அதிகரிப்பு...
உலகப் பெரும்பணக்காரர்களின் பட்டியலை, புளூம்பெர்க் நிறுவனம் (Bloomberg Billionaires Index) வெளியிட்டுள்ளது. இதில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி வழக்கம்போல இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக வந்துள்ளார். உலக அளவில் 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக அளவில் அம்பானிக்கு அடுத்தபடியாக 14-ஆவது இடத்தைப் பிடித்து, ஆச்சரியம் அளித்துள் ளார். அத்துடன், ஆசியாவின் 2-ஆவது பெரும் பணக்காரராக இருந்து வந்த சீனாவின் ஸாங் ஷான்ஷானை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் வரை சீனாவின் ஸாங் ஷான்ஷான்தான் ஆசிய அளவில் முதற்பெரும் பணக்காரராக இருந்தார். அவரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதல் இடத்துக்கு முன்னேறினார். ஷான்ஷான் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தார். தற்போது, அவரை இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு அதானி தள்ளியுள்ளார்.அம்பானியின் சொத்து மதிப்பு 76.5 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், அதானியின் சொத்து மதிப்பு மிகக் குறுகிய காலத்தில் 66.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, அதானியின் சொத்து மதிப்பு- கடந்த ஒரே ஆண்டில் மட்டும்- அதுவும் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே சுமார் 32.7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அதானி டோட்டல் கேஸ் 1145 சதவிகிதம், அதானி எண்டர்பிரைசர்ஸ் 827 சதவிகிதம், அதானிடிரான்ஸ்மிஷன் 617 சதவிகிதம், அதானி கிரீன் எனர்ஜி 433 சதவிகிதம், அதானி பவர்189 சதவிகிதம் என வளர்ச்சி அடைந்துள் ளன. ஆசியாவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஷான்ஷானின் சொத்து மதிப்பு 63.6 பில்லியன் டாலராக உள்ளது.