india

img

ஊதியத் திருத்தம் கோரி போராட்டம்.... விசாகப்பட்டினம் உருக்குத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி.... சிஐடியு இந்திய உருக்குத் தொழிலாளர் சங்கம் பாராட்டு....

புதுதில்லி:
ஊதியத் திருத்தம் கோரி விசாகப்பட்டினம் உருக்காலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதற்கு சிஐடியுவும், இந்திய உருக்குதொழிலாளர்கள் சங்கமும் பாராட்டுதல்களை யும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினம் உருக்காலையில் ஜூன் 29 அன்று வேலைநிறுத்தம் நடைபெற்றது. அடுத்து இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி லிமிடெட் நிறுவனத்தின் ஆலைகளிலும், சுரங்கங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் ஜூன் 30 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இவ்விரண்டு வேலைநிறுத்தங்களுக்கும் இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி லிமிடெட் (SAIL) மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள  ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் (RINL) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் இயங்கிடும் அனைத்துத் தொழிற் சங்கங்களும் அறைகூவல் விடுத்திருந்தன. 

விசாகப்பட்டினம் உருக்குத் தொழி லாளர்கள் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கவுரவமான ஊதியத் திருத்தம் கோரியிருந்தனர். 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தரமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் இவற்றின்கீழ் இயங்கிடும் பல்வேறு உருக்கு ஆலைகளிலும், சுரங்கங்களிலும், நிறுவனங்களிலும்  வேலை செய்து வருகிறார்கள். இரு நாட்களும் நடைபெற்ற வேலைநிறுத்தம் 70 சதவீதத்திலிருந்து  95 சதவீதம் வரை வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியத் திருத்தம் மேற்கொள்ளப்படாமல் இவ்விரு பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகங்களும் அடாவடித்தனமாக செயல்பட்டு வருகின்றன.  இதன் காரணமாகவே இந்நிறுவனங்களில் இயங்கிடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ஜூன் 29ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 30 ஆம் தேதி இதர இடங்களிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

பலியான 600 பேருக்கு இழப்பீடு கூட இல்லை
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில்கூட இத்தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆலைகளிலும், சுரங்கங்களிலும் வேலை செய்தார்கள். இதன்காரணமாக இவர்களில் 600-க்கும் மேற்பட்டோர்தங்கள் உயிர்களைப் பறிகொடுத்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இதன் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். இருந்தாலும்கூட நிர்வாகங்கள் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடோ, இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கருணை அடிப்படையில் வேலைகளோ கொடுக்க முன்வரவில்லை. இந்த அளவிற்கு நிர்வாகங்கள் ஆணவத்துடன் நடந்துகொண்டுள்ளன.இந்த நிலையில்தான் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு இப்போராட்டங் களில் ஈடுபட்டு இதனை மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்திருக்கின்றன.

இந்த ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று சிஐடியு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நிரந்தரமான மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கவுரவமான ஊதியத்திருத்தம் ஏற்படுத்தப்படும் வரையிலும், தனியார்மயத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் நாசகரக் கொள்கை களால் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராகவும் இத்தகு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் தொடர வேண்டும் என்று சிஐடியு கேட்டுக்கொண்டுள்ளது. ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே நமது துயரோட்டும்.இவ்வாறு சிஐடியு தெரிவித்துள்ளது. (ந.நி.)