புதுதில்லி:
பீமா கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட் டுள்ள அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பழங்குடியினர் உரிமைகளுக்கான தேசிய அமைப்பு (ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச்), அருட் தந்தை ஸ்டான்சுவாமி நீதிமன்றக் காவலிலேயே நிறுவனரீதியாகக் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் எம். பாபுராவ் ,தேசிய கன்வீனர் ஜிதேந்திர சௌத்ரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஏஏஆர்எம் என்னும் பழங்குடியினர் உரிமைகளுக்கான தேசிய அமைப்பு, அருட் தந்தை ஸ்டான்சுவாமி இழப்பிற்கு தன் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்திக்கொள்கிறது. அவருடைய மரணம் மோடி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனரீதியான கொலையாகும். தேசியப் புலனாய்வு முகமை புலனாய்வு மேற்கொள்ளும் தன்னுடைய நடைமுறைகள் மற்றும் நோக்கத்தின் மூலமும், ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்போரைத் தண்டித்திடக்கூடிய விதத்தில் பொய்க்குற்றச்சாட்டுக்களைப் புனைவதன் மூலமும் தானும் கிரிமினல்ரீதியாகச் செயல்படும் என்பதை நிரூபித்திருக்கிறது.அருட் தந்தை ஸ்டான் சுவாமி, ஜார்கண்ட் மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக கடந்த பல பத்தாண்டுகளாகப் பாடுபட்டு வந்தவர். அநேகமாக இவர்தான் நாட்டின் வரலாற்றில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் சிறைப் படுத்தப்பட்ட 84 வயது முதியவராக இருப்பார்.
அரசாங்கத்தின் அநீதிக்கு உடந்தையாக நீதித்துறை
அருட் தந்தை ஸ்டான் கைது செய்யப்பட்டசமயத்தில், பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டும்மற்றும் பல்வேறு நோய்களினாலும் அவதிப்பட்டுக்கொண்டும் இருந்தார். அவருடைய உடல்நலம் சிறையில் மிகவும் வேகமாக மோசமாகிக் கொண்டிருந்தது. நீராகாரம் அருந்துவதற்குத் தனக்கு அவசியத் தேவையாக விளங்கும்உறிஞ்சு குழாய் மற்றும் ஸ்ட்ரா போன்றவற்றிற்குக் கூட அவர் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந் தது. அதுவும் இந்த மிக எளிய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கே நீண்ட காலம் எடுத்துக் கொண்டது.சிறையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்றுகூட அவர் பரிசீலிக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவர் மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் அவரைப் பிணையில் விட வேண்டும் என்று எண்ணற்ற பிணை விண் ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டபோதும், நீதித்துறை அவருக்கு பிணையை மறுத்து அரசாங்கத் தின் அநீதிக்கு உடந்தையாக இருந்தது.அவர் கைது செய்யப்பட்டு நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த விதம், கொடுமையான தண்டனைக்குக் குறைந்தவிதத்தில் இருந்திடவில்லை.அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் களைப் பொறுத்தவரை, அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பீமா கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 16 பேர்களில் அவர் கடைசி நபர்.
அவரைக் கைது செய்தபோது அரசுத்தரப்பில் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும்என்று காட்டிக்கொண்டது. ஆனால் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபின் அவரிடம் எவ்விதமான விசாரணையும் நடத்தப்படவில்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யாகப் புனையப்பட்டவை. அவருடைய கணினியில் உள்ள ஆவணங்கள் அவருக்குத் தெரியாமலேயே ஏற்றப்பட்டவை. இதனை பாஸ்டனில் இயங்கும் ‘அர்சனல் கன்சல்டிங்’ என்னும் தடய அறிவியல் ஆய்வகம் உறுதிப்படுத்தி இருக்கிறது.ஒன்றிய அரசாங்கத்தின் கொடூரமான மற்றும் பழிவாங்கும் முறை காரணமாக அருட் தந்தை ஸ்டான் சுவாமி மரணத்திற்காகத் துயருரும் அதேசமயத்தில், அவரைக் காவலில் அடைத்து வைத்திருந்தது, கிஞ்சிற்றும் கவலையற்று புறக்கணித்தது மற்றும் சிறையில் கிரிமினல்ரீதியாக அவர் நடத்தப்பட்ட கொடுமை முதலான அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பானவர்கள் யார் யார் என்பது நிச்சயிக்கப்பட வேண்டும் என்று ஏஏஆர்எம் அமைப்பு கோருகிறது.
ஏஏஆர்எம், அருட் தந்தை ஸ்டான் சுவாமி நீதிமன்றக் காவலிலேயே நிறுவனரீதியாகக் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் முழங்க வேண்டும்என்றும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்றும் நாடு முழுவதும் இதுபோல் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருந்து வரும் இதர பழங்குடியினர் மற்றும் தலித்துகளையும் விடுதலை செய்திட வேண்டும் என்றும் கோரி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.