india

img

பிப்.4-ல் சௌரி சௌரா நூற்றாண்டு விழா..... பிரதமர் துவக்கி வைக்கிறார்...

புதுதில்லி:
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான நாட்டு மக்களின் எழுச்சிக்கு அடையாளமான  சௌரி சௌரா சம்பவத்தின் நூற்றாண்டு விழா பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவை காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக காந்தி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை-சட்டமறுப்பு இயக்கம் நாடு முழுவதும் எழுச்சியாக நடைபெற்றது. 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி  5 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர்நகருக்கு உட்பட்ட சௌரி சௌரா பகுதியில் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதுஆங்கிலேய காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்  போராட்டக்காரர்களில் பலர் கொல்லப்பட்டனர்.  இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி, தீ வைத்தனர்.  இந்த சம்பவத்தில் 22 ஆங்கிலேய காவலர்கள் உயிரிழந்தனர். இதில் 225 இந்தியர்கள்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.  அவர்களில் 172 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 19 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது.153 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் கொடுஞ்சிறைக்கு அனுப்பப்பட்டனர்.  

1982 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர்இந்திரா காந்தி தலைமையில் சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கான ஷாகீத் ஸ்மராக் அடிக்கல் நாட்டப்பட்டது.  1993 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையில் நினைவகம் தொடங்கி வைக்கப்பட்டது.இந்நிலையில் தூக்கில் போடப்பட்ட, கொடுஞ்சிறை தண்டனை அனுபவித்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் சௌரி சௌரா  நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான தொடக்க விழா பிப்ரவரி 4 அன்று நடைபெறுகிறது. இந்த விழாவை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வழியே துவக்கி வைக்கிறார் என்று செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.