புதுதில்லி:
கொரோனா தொற்று பரவலின் தாக்கத்திலிருந்து பொருளாதாரத்தை மீட்க ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு ஊக்க சலுகைகளை அளிக்கவேண்டும் என்றும் இதற்கு ரிசர்வ் வங்கியும் கடன் வழங்கும் அளவை அதிகரிக்க வேண்டும்என்றும் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு(சிஐஐ) ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
மக்களின் செலவு செய்யும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஜன்தன் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை மக்களுக்கு அளிக்கலாம். மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போல அரசு ஊழியர்களுக்கு விடுப்புடன் கூடிய ரொக்க சலுகை (எல்டிசி) வவுச்சர்களை அளிக்கலாம். அவசர கால கடன் உதவி சலுகையை ரூ. 5 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்.இந்த கால அளவை 2022 மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கலாம் என்றும் எரிபொருள் மீதான உற்பத்தி வரியைக் குறைக்காம் என்றும் நாளொன்றுக்கு 71.2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சிஐஐ நடத்திய கருத்துக் கணிப்பில் 51 சதவீத உறுப்பினர்கள் தங்கள் நிறுவனம்இரண்டாவது அலையில் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஊழியர்களில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவச் செலவு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.நடப்பு நிதி ஆண்டில் 9.5 சதவீத ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இலக்கை எட்ட வேண்டுமெனில் இரண்டாவது அரையாண்டில் பொருளாதார மீட்சி நிச்சயம் ஏற்பட வேண்டும் என்று சிஐஐ குறிப்பிட்டுள்ளது.தற்போதைய சூழலில் நாட்டின் நிதி பற்றாக்குறை 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் 1.3 சதவீத அளவுக்கு ஊக்க சலுகைகளை அளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த அளவானது ரூ. 3 லட்சம்கோடியாக இருக்கும் என்று சிஐஐ தலைவர் டி.வி. நரேந்திரன் தெரிவித்துள்ளார்.