புதுதில்லி:
தில்லியில் 9 வயது தலித் சிறுமி, பூசாரி உள்ளிட்ட 4 பேர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அந்த குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, ‘நீதி கிடைக்க துணை இருப்போம்!’ என உறுதியளித்தார். அப்போது அந்தச் சிறுமியின் தாயுடன் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அந்தச் சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ போக்சோ சட்டப்படி குற்றம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. ராகுல் காந்தி, போக்சோ விதிமுறைகளை மீறிவிட்டதால், டுவிட்டர் நிறுவனம் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது. டுவிட்டர் நிறுவனமும் ராகுலின் டுவிட்டர் கணக்கை 24 மணி நேரத்திற்கு முடக்கியது.
இந்நிலையில், ராகுலின் டுவிட்டர் கணக்குமுடக்கத்தை கண்டித்துள்ள காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “ஒன்றிய அரசின் அதிகமான அழுத்தம், நெருக்கடி காரணமாகவே, டுவிட்டர்நிறுவனம் ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் மீது நடவடிக்கை எடுத்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.“பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசானது, இரக்கத்துக்கும், நீதிக்கும் ஆதரவாகக் குரல் எழுப்புபவர்களின் குரலை நசுக்குகிறது. பிரதமர் மோடி அச்சப்படுகிறார். அதனால்தான் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கை முடக்கியுள்ளார். ஆனால், நீதியின் குரலை மோடியால் நசுக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி,தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தினர், கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோருடன் தாங்கள் இருக்கும்புகைப்படத்தையும் டுவிட்டரில் பதிவிட்டனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் பாஜக-வின் முன்னாள் எம்.பி.தான், தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த 3-ஆம் தேதி சிறுமியினுடைய தாயாரின்புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது அனைவரும் அறிந்ததே. ஆனால், சிறுமிக்கு நீதிகேட்கும் போராட்டத்தில், ராகுல் காந்தி அந்தச் சிறுமியின் தாயிடம் பேசிய புகைப்படத்தை பதிவிட்டது மட்டும் குற்றமாகி விட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.