2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கான என்.ஐ.ஆர்.எப் தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
இதற்காக என்.ஐ.ஆர்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்கள், மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளாக தரவரிசைப்படுத்தி அறிவித்து வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சகம் 2024ஆம் ஆண்டின் சிறந்த மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலைகழகம் - தமிழ்நாடு முதலிடமும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் – கொல்கத்தா இரண்டாமிடத்தையும், சவித்ரிபாய் பூலே பல்கலைகழகம் – புனே மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.
பொறியியல் துறை சார்ந்த பட்டியலில், ஐஐடி சென்னை முதலிடமும், ஐஐடி தில்லி இரண்டாமிடமும், ஐஐடி மும்பை மூன்றாமிடமும் பிடித்துள்ளது. மருத்துவத் துறையில், தில்லி எய்ம்ஸ் முதலிடமும், சண்டீகர் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாமிடமும், வேலூர் சிஎம்சி மூன்றாமிடமும் பெற்றுள்ளது.