ஸ்வீடன்:
இந்தியாவில் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் ஊடகங்கள், கல்வியாளர்களின் சுதந்திரம் பெருமளவில் குறைந்துள்ளது என்று ஸ்வீடன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் இயங்கிவரும் வி-டெம்இன்ஸ்டிட்யூட் சமீபத்தில் `ஜனநாயக அறிக்கை-2021’ என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியா எதேச்சதிகாரத்தை நோக்கி பயணிப்பதாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ஊடகங்கள்,கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இது இந்தியா எதேச்சதிகார செயல்முறையில் பயணிக்கிறது என்பதைக் காட்டுகிறது. மோடிஅரசுக்கு முன்னர் இருந்த அரசாங்கம் தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது. ஆனால், இப்போது இந்திய அரசு பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாகவும், அதன் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளத்தை விட மோசமானதாகவும் உள்ளது. இப்போது உள்ள இந்திய அரசு 2019 ஆம்ஆண்டு திருத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் UAPA சட்டம், அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.அத்துடன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும்மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவை உலகின் ‘மிகப்பெரிய ஜனநாயகம்’ என்ற அந்தஸ்திலிருந்து ‘தேர்தல் எதேச்சதிகாரம்’ என்ற அந்தஸ்திற்கு தரம் குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி சாடல்
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி மோடிஆட்சியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். இந்த அறிக்கைதொடர்பான செய்தியை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர்ராகுல் காந்தி, இந்தியா ‘இனி ஜனநாயக நாடகஇருக்காது’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.