india

img

சாய்பாபா விடுதலை முரளிதரன் வரவேற்பு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் ஜி.என்.சாய்பாபா மற்றும் பலர் மீதான வழக்கில், குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படவில்லை எனக் கண்டு அவர்கள் அனைவரையும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வாயம் விடுதலை செய்துள்ளதை, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் வரவேற்றுள்ளார்.   

இதுதொடர்பாக முரளிதரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

டாக்டர் சாய்பாபாவைப் பொறுத்தவரை, அவர் போன்று ஊனமுற்றோர் சிறையிலடைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு ஊனமுற்றோருக்கான சர்வதேச சட்டங்கள், உடன்படிக்கைகள், நெல்சன் மண்டேலா விதிகள், ஊனமுற்றோர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் கன்வென்ஷன்கள், 2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் மற்றும் பல சட்டங்களின்கீழ் போதுமான தங்கும் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை பலமுறை பிரச்சனையை எழுப்பி வந்திருக்கிறது.

இவ்வாறு பலமுறை மனித உரிமைகள் அமைப்புகளுக்கும், ஜனநாயக எண்ணம் கொண்டோருக்கும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகளுக்கும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், டாக்டர் சாய்பாபா மருத்துவக் காரணிகளின் அடிப்படையிலும்கூட பிணை மறுக்கப்பட்டு, சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, அவற்றில் சில அவருடைய உயிருக்கு ஆபத்து விளைக்கக்கூடிய நிலையில் இருந்தபோதிலும்கூட, அவர் பிணையில் விடுவிக்கப்படவில்லை.

இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவர் போதுமான அளவிற்கு மருத்துவக் கவனிப்புப் பெறுவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருக்கின்றன என நம்புகிறோம்.

நீதிக்கான போராட்டத்தில் சாய்பாபாவுடன் இணைந்து நின்று அவருடைய மனைவி வசந்தா மற்றும் பலர் உறுதியுடனும், தைர்யத்துடனும் தொடர்ந்து  நடத்தி வந்த போராட்டத்திற்கு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு முரளிதரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(ந.நி.)