மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று(12.09.24) பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். யெச்சூரியின் மறைவுக்கு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீத்தாராம் யெச்சூரி மறைவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் “சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இடதுசாரிகளின் முக்கியத் தலைவராக இருந்தவர். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர். யெச்சூரியின் குடும்பத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவு வேதனையளிக்கிறது. மாணவர் தலைவராகவும், தேசியத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் தனித்துவமான செல்வாக்குமிக்கவராகவும் இருந்தார். அவரது உறுதியான சித்தாந்தங்களால் கட்சிக்கும் அப்பாற்பட்ட நண்பர்களை பெற்றிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், அவரது சகாக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி., வெளியிட்டுள்ள பதிவில், எனது நண்பரான யெச்சூரி இந்தியா குறித்த ஆழமான புரிதலை கொண்டிருந்தார். இந்தியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதில் அக்கறையும் கொண்டிருந்தார். அவருடனான நீண்டகால தொடர்பை இழந்துள்ளேன். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையான சீத்தாராம் யெச்சூரி மறைவு வேதனையளிக்கிறது. சிறுவயதில் இருந்தே நீதிக்காக அர்ப்பணிப்புடன் போராடிய அச்சம் இல்லாத தலைவர். அவசர நிலையின் போது தைரியத்துடன் மாணவர் தலைவராக இருந்தவர்.
மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றிற்காக அர்பணிப்புடன் பணியாற்றியவர். இந்த கடினமான தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.