india

img

ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க நிலம் தேர்வு... கனிமொழி எம்.பி., கேள்விக்கு மத்திய அரசு பதில்....

புதுதில்லி:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார். அதில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக் கிறது? என்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில்,  ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அடங்கிய அறிக்கைகள், இந்தியதொல்லியல் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையால் அகழாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும்ஊர்களில் முதன்மையானதாக ஆதிச்ச நல்லூர் உள்ளது. ஆதிச்சநல்லூரில் வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் மற்றும் மத்திய தொல்லியல் துறையினரால் பலமுறை அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.