india

img

மோடிக்கு எதிராக மக்களை இணைக்கும் மனிதச் சங்கிலி....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு எதிரான மோடியின் அணுகுமுறை இந்திய மக்களைஒன்றிணைத்துள்ளது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர்டாக்டர் அசோக் தாவ்லே கூறினார். 

மோடி அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் கடந்த 9 மாதங்களாக நடந்துவரும் விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாட்டில் இருந்து  ஆயிரத்து 200 விவசாயிகள் சிங்கு எல்லையில் மனிதச் சங்கிலியாக அரண் அமைத்து நின்றனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு அகில இந்தியத்தலைவர் அசோக் தாவ்லே தலைமை தாங்கினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூரும் நாளானஆகஸ்ட் 9 மோடியே வெளியேறு, அம்பானி, அதானி வகையறாவே வெளியேறு என்று உரக்க குரல் எழுப்பி மனித சங்கிலியில் விவசாயிகள் ஆர்ப்பரித்தனர். கடுமையான போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அரண் அமைத்து நின்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பஞ்சாப், ஹரியானா மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த போராட்டத்தில்  விவசாய சங்கத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் விஜூ கிருஷ்ணன், நிதி செயலாளர் கிருஷ்ண பிரசாத், இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு, விவசாயிகள் சங்க தமிழ் மாநில தலைவர் வி..சுப்பிரமணி யன், பொருளாளர் கே. பெருமாள், மாநில நிர்வாகிகள் டி. ரவீந்திரன், சாமி நடராஜன்,பி. டில்லிபாபு, டி. கண்ணன், முத்துராமு, மதுசூதனன், துளசி நாராயணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். மனிதச்சங்கிலி போராட்டத்தை தொடர்ந்து மாபெரும் பேரணி நடைபெற்றது.பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்தில் டாக்டர் அசோக் தாவ்லே பேசுகையில், விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசின் மோசமான நடவடிக்கை இந்திய விவசாயிகளை ஓரணியில் திரட்டி உள்ளது. அதானி, அம்பானிகளின் கைப்பாவையாக செயல்படும் மோடி விவசாயிகளின் விரோதியாக கருதப்படுகிறார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்தியாவில் பல மாநில அரசுகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. 

கேரள பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, தமிழகத்தில் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மேற்கு வங்கத்தில் மம்தா அரசு ஆகியவை ஒன்றிய அரசுக்கு எதிராக திரும்பியுள்ளன. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் வாக்குகளை அவர்கள் இழந்துவிட்டனர்.  உபி தேர்தலில் பாஜக வீழ்ச்சி யடையும்.இந்த போராட்டத்தின் வீச்சு தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா,அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காட்டுத்தீ போல் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிட்டது. விவசாயிகள் போராட்டத்தை இனி மோடியால் பலவீனப்படுத்த முடியாது. தில்லியின் எல்லைக்கு வெளியே உள்ள சிங்கூ,திக்ரி, படர்பூர், காஜிபூர் எல்லை களில் விவசாயப் போராளிகள் முகாம் அமைத்து வருகின்றனர். மோடியின் சர்வாதிகாரம் முடிவுக்கு வரும் நாள் வந்துவிட்டது என்றார். 

மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் முன்னணி ஆகியவற்றின் அறைகூவலுக்கிணங்க இந்தியாவைப் பாதுகாப்போம் தினம் ஆகஸ்ட் 9 அன்று  நாடு முழுவதும் எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தபன் சென் (சிஐடியு), அமர்ஜீத் கவுர் (ஏஐடியுசி), ஹர்பஜன் சிங் (எச்எம்எஸ்) உட்பட பலர் உரையாற்றினர். 

தில்லியிலிருந்து ம.மீ. ஜாபர்