புதுதில்லி:
மத்திய அரசின் கீழ் கொல்கத்தா, செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இயங்கிவரும் பார்வையற்றோர்க்கான தேசிய பயிற்சி நிறுவனத்தை மூடக்கூடாது என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.
கொல்கத்தா மற்றும் செகந்திராபாத் பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டன. மற்றொரு ஆர்ப்பாட்ட த்தை செவ்வாயன்று கொல்கத்தாவில் பார்வையற்றோர் தேசிய பயிற்சி நிறுவனத்தின் முன்பு நடத்திடவும் முடிவு செய்துள்ளன.மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் டேராடூனில் இயங்கிவரும் தேசிய பார்வையற்றோர் பயிற்சி நிலையம், நாட்டில் கொல்கத்தாவிலும், செகந்திராபாத்திலும் அதன் நிர்வாகத்த்தின்கீழ் இயங்கிவந்த பயிற்சி நிலையங்களை மூடிட முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு மூடக்கூடாது என்று நாட்டில் இயங்கும் 97 ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகள் அரசுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளன. மேலும் டிசம்பர் 18 அன்று கொல்கத்தா பயிற்சிநிறுவனத்தின் முன்பும், 19ஆம் தேதி செகந்திராபாத் பயிற்சி நிறுவனத்தின் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. வரும் டிசம்பர் 22 அன்று கொல்கத்தாவில் உள்ள பயிற்சி நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்திருக்கின்றன.
மத்திய அமைச்சருக்கு கடிதம்
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகள் சார்பில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவார் சந்த் கெலாட்டிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:ஊனமுற்றோர் உரிமைகளுக்காக நாடு முழுதும் செயல்பட்டு வரும் நாங்கள், டேராடூன், தேசிய பார்வையற்றோர் பயிற்சி நிறுவனம், அதன்கீழ் கொல்கத்தாவிலும், செகந்திராபாத்திலும் இயங்கிவந்த மண்டல பார்வையற் றோர் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு முடிவு செய்திருப்பதற்கு எங்களின் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்கிறோம். நம் சமூகத்தில் பாகுபாடுகளுக்கு ஆளான மிகவும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பிரிவினருக்கு சம வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இத்தகைய பயிற்சி நிறுவனங்கள் மண்டல அளவில்நிறுவப்பட்டன. இவற்றை மூடுவது என்பதுதற்போது அங்கே பயின்றுவரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அப்பகுதிகளில் இதுபோன்ற ஊனமுற்ற நிலையுடன் வளர்ந்துவரும் எதிர்கால சந்ததியினருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.இந்தப் பயிற்சி நிறுவனங்கள் சார்பாக அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின்கீழ் இலவசமான உதவிகள் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வந்தன. இப்போது இவ்வாறு இவற்றை மூடுவதால் அவ்வாறு இலவச உதவிகள் பெறுவது என்பதும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இப்போது இரு பயிற்சி நிறுவனங்கள் மூடுவது மட்டுமல்லாது, 2020 புதிய கல்விக்கொள்கையின் அங்கமாக எதிர்வருங் காலங்களில் மேலும், பல பயிற்சி நிறுவனங்கள்மூடப்படக்கூடும் என்றும் ஐயுறுகிறோம். ஏனெனில் புதியக் கல்விக் கொள்கையின் நோக்கமே கல்வியை வணிகமயமாக்க வேண்டும் என்பதேயாகும். மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்றும், ஊனமுற்றோர் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் நிறுவனங்களை மூடக்கூடாது என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றும் கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தக் கடிதத்தில் புதுதில்லியில் உள்ள ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளீதரன்,பார்வையற்றோர்க்கான தேசிய சங்கத்தின்செக்ரடரி ஜெனரல், எஸ்.கே.சிங், அகிலஇந்திய காது கேளாதோர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன், தமிழ்நாடு, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேரா. டி.எம்.என். தீபக், சென்னை, பார்வையற்றோர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எல். கோவிந்த ராவ், சென்னையைச் சேர்ந்த ஊனமுற்றோர் உரிமைகளுக்கான ஆலோசகர் ஸ்மிதா சதாசிவன், சென்னையைச் சேர்ந்த கே. ரகுராமன், டாக்டர் வி.ஜானகி உட்பட 97 அமைப்புகள் கையெழுத்திட்டிருக்கின்றன.(ந.நி.)