புதுதில்லி:
தில்லி மாநகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற 5 வார்டுகளில் அக்கட்சிக்கு ஒரு இடத்தைக் கூடவழங்காமல் மக்கள் தோற்கடித்துள்ளனர்.
வடக்கு தில்லி மாநகராட்சியில் ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் (வடக்கு) ஆகிய 2 வார்டுகளிலும், கிழக்கு தில்லி மாநகராட்சியில் திரிலோக்புரி, கல்யாணபுரி மற்றும் சவுகான்பேங்கர் ஆகிய 3 வார்டுகளிலும் பிப்ரவரி 28 அன்று தேர்தல்நடைபெற்றது. இந்த 5 இடங்களிலுமே பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. திரிலோக்புரி, கல்யாணபுரி, ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக்கில் ஆளும் ஆம் ஆத்மிகட்சியும், சவுகான் பேங்கரில் காங்கிரசும் வெற்றி பெற்றுள் ளன. ‘ஷாலிமார் பாக்’ வார்டைத்தவிர, ஏனைய 4 வார்டுகளில் இதற்கு முன்பும் ஆம்ஆத்மி கட்சிதான் வெற்றி பெற்றிருந்தது. ‘ஷாலிமார் பாக்’ வார்டுபாஜக வசம் இருந்ததாகும். ஆனால் அந்த வார்டும் தற்போது ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது. ஆம் ஆத்மியிடமிருந்த சவுகான் பேங்கரை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
2012 முதல் தில்லி மாநகராட்சி மேயர் பதவிகளை பாஜகதான் வைத்துள்ளது. எனினும் தற்போது வார்டு தேர்தல்களில் கூட அக்கட்சியால் வெல்ல முடியாதது, பாஜக-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக தோற்ற வார்டுகளில் ஷாலிமார் பாக் (வடக்கு) பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு என்பதும், திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை பட்டியல் வகுப்பினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட வார்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.