india

img

சீனா 10 முறை என்றால் இந்தியா 50 முறை ஊடுருவல் நடத்தியிருக்கிறது.... நாம் தான் அதிக முறை எல்லை தாண்டியிருக்கிறோம்.. மத்திய அமைச்சர் வி.கே. சிங் பேட்டியால் பரபரப்பு.....

புதுதில்லி:
சீனாவைக் காட்டிலும் இந்திய ராணுவம்தான் அதிகமுறை எல்லை தாண்டிய ஊடுருவல்களை நடத்தியுள்ளது என்று இந்திய ராணுவ முன்னாள் தளபதியும், தற்போதைய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சருமான வி.கே.சிங் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1947-இல் நாடு விடுதலையடைந்த காலம்தொட்டே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே- தீர்க்கப்படாத ஒன்றாக  எல்லைப் பிரச்சனை நீடிக்கிறது.ஒரு பொதுவான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி (Line of Actual Control - LAC) உருவாக்கப்பட்டு, அதனை மீறாமல் நடந்து கொள்வது என்பதுதான் தற்போது வரை இருக்கிறது.ஆனால், இந்த கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியைத் தாண்டி வருவதாக இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளுமே அவ்வப்போது குற்றம்சாட்டிக் கொள்வதும், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரண்டு தரப்புமே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து குறிப்பிட்ட தூரம் பின்வாங்கிச் செல்வது என்பதும் நடைமுறையாக உள்ளது.பொதுவாக ராணுவத்தைப் பொறுத்தவரை, இவ்வாறு எல்லை தாண்டுவதும் பின்னர்பின்வாங்குவதும் ஒரு உத்தியாக கூறப்படுவது உண்டு.

இந்நிலையில்தான், கடந்த 2020 ஜூனில் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவல் முயற்சி என்ற பரஸ்பர குற்றச்சாட்டு அடிப்படையில், இந்திய - சீன துருப்புக்கள் மோதிக் கொண்டன. இதில் 20 இந்திய வீரர்கள் வரை பலியாகினர். நூறுபேர் வரை காயம் அடைந்தனர். அப்போது, இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். இழந்த நிலப்பரப்பை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் குரல்கள் எழுந்தன. 

அப்போது, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அதேநேரம் சீனா ராணுவத்தினர் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. ஒரு கையளவு நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. அதை நமது ராணுவம் அனுமதிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. சீன ராணுவத்தினர் ஊடுருவவில்லை என்றால், பின்னர் நமது வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்..? சண்டை எங்கே நடந்தது? இந்திய 
துருப்புகள்தான் எல்லை தாண்டி வந்தார்கள் என்று சீனா குற்றம் சாட்டுகிறது. அப்படியானால் நாம் எல்லை தாண்டிச் சென்றபோதுதான் அவர்கள் தாக்கினார்களா? பிரதமர் என்னசொல்ல வருகிறார்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

எனினும், இந்தச் சம்பவத்திற்கு பிறகு எல்லையில் அதிகளவில் படைகளைக் குவித்த மோடி அரசு, சீன செயலிகளுக்குத் தடை, பொருட்களுக்கு அதிக வரி, இறக்குமதிக்கு கட்டுப்பாடு; சீனாவுக்கு எதிரி நாடுகளாக கருதப்படும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சி என்று அடுத்தடுத்து மேற்கொண்ட நடவடிக்கைகளால், மேற்கண்ட கேள்விகள் அமுங்கிப் போயின.இந்நிலையில், இந்திய ராணுவ முன்னாள்தளபதியும், பாஜகவைச் சேர்ந்த தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே. சிங் அளித்துள்ள பேட்டி, இந்திய - சீனா எல்லை விவகாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.சீனாதான் இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது என்று இவ்வளவு காலமாக கூறப்பட்டு வரும் நிலையில், அதனை மறுக்கும் விதமாக இந்திய ராணுவம்தான் அதிகமுறை சீனா எல்லைக்குள் ஊடுருவல் நடத்தியிருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வி.கே. சிங் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லை ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி எனப்படும் எல்ஏசி பகுதியில் சீனா கூறும் வரம்பு மீறல்கள் நடந்துள்ளன. அதேபோல், எங்கள் கருத்துப்படி நாங்கள் எத்தனை முறை எல்லை மீறினோம் என்பதை நீங்கள் யாரும் அறிய மாட்டீர்கள். நாங்களும் அதை அறிவித்தது இல்லை. சீனஊடகங்கள் அதை மறைக்கவில்லை. குறிப்பாக, சீனா 10 தடவைகள் எல்லை மீறலை நிகழ்த்தி இருந்தால், எங்கள் கருத்துப்படி நாங்கள் (இந்திய ராணுவம்) குறைந்தபட்சம் 50 தடவையாவது எல்லை மீறலை செய்திருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.லடாக் பகுதியில் சீனா ஊடுருவவில்லை என முன்பு பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்ததும், இந்தியாதான் அதிக அளவில் ஊடுருவும் பழக்கம் கொண்டது என்று தற்போது வி.கே. சிங் கூறியிருப்பதும் ஒரே புள்ளியில் இணைந்துஉள்ளது.

வி.கே. சிங்கின் இந்தப் பேட்டி, இந்திய - சீனா ஆகிய இருநாடுகளிலும் முக்கியச் செய்தியாக மாறியுள்ளது. வி.கே. சிங் தன்னையறியாமல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வரவேற்றுஉள்ளார். ‘இந்தியாவின் அத்துமீறல்கள்’தான், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பதற்றங்களுக்கு மூல காரணம் என்பதை வி.கே. சிங்கின் வாக்குமூலம் தெளிவுபடுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறத்தில், வி.கே. சிங்கின் பேச்சுக்கு, இந்திய முன்னாள் ராணுவ அதிகாரிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.சீனா ஆக்கிரமித்ததாக நாம் குறிப்பிடும் 1000 சதுர கி.மீ. நிலத்தையும் சீனாவுக்கே அளிக்க வி.கே. சிங் விரும்புகிறாரா? என்று முன்னாள் ராணுவ அதிகாரி பிரவீன் சாவ்னி தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். “வி.கே. சிங்கிற்கு (இவர்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதி) போர் நடவடிக்கைகள் தெரியவில்லை. அவரது கருத்து சீனத் தரப்பை பலப்படுத்தும் வகையில் உள்ளது” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.வி.கே. சிங்கின் பேச்சு, “ஆக்கிரமிப்பு பகுதிகளை சீனாவிடம் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியை இந்தியா கைவிட்டுள்ளது போல் தோற்றமளிக்கிறது” எனவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.மோடி அரசின் நிர்வாக லட்சணம் வி.கே. சிங் பேட்டி மூலம் அம்பலப்பட்டுள்ளது.