புதுதில்லி:
மூன்று பேர்களைக் கொண்ட, இந்திய தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு அடுத்த இடத் தில் இருந்த சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகிய இருவரில், சுஷில் சந்திரா புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஆனார். இதனால், தேர்தல் ஆணையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒருஇடம் காலியாக இருந்து வந்தது.இந்நிலையில், அந்த மூன்றாவது தேர்தல் ஆணையர் இடத்திற்கு, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனுப் சந்திர பாண்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியான அனுப் சந்திரபாண்டே (62) உ.பி. கேடரைச் சேர்ந்த1984 பேட்ச் அதிகாரி ஆவார். உ.பி.முதல்வர் ஆதித்யநாத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அதன்காரணமாகவே, சீனியாரிட்டியில் 13 ஐஏஎஸ்அதிகாரிகள் இருந்தும், அவர்களைத் தாண்டி ஆதித்யநாத்தால் தலைமைச் செயலாளர் ஆக்கப்பட்டவர். அனுப் சந்திர பாண்டே 2019 பிப்ரவரியில் ஓய்வுபெற்ற பிறகும்கூட ஆதித்யநாத் அவரை விடுவதாக இல்லை. ஆகஸ்ட் 31 வரை பணிநீட்டிப்பு வழங்கி, கூடவேவைத்துக் கொண்டார்.இந்நிலையில்தான், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அனுப் சந்திர பாண்டே-வை மத்தியஅரசு நியமித்துள்ளது.