புதுதில்லி:
இந்திய கப்பற் படையை மேம்படுத்தும் வகையில் புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறையின் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழலில், இந்த 6 நீர்மூழ்கிக்கப்பல்களை தயாரிக்க சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.‘மேக் இன் இந்தியா’ திட்டத் தின் கீழ் ‘பி-75 இந்தியா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களை, ரஷ்யா,பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென் கொரியா ஆகிய 5 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் நிறுவனத்துடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் செய்துகொண்டு, மும்பையிலுள்ள அரசுக்கு சொந்தமான மஸாகான் கப்பல் கட்டும் தளம்,தனியார் நிறுவனமான ‘எல்அண்ட் டி’ நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து தயாரிக்கும்.அவை எப்படி இருக்க வேண்டும்; என்னென்ன வசதிகள் இடம்பெற வேண்டும் என்பதை இந்தியக் கடற்படையும், பாதுகாப்பு அமைச்சகமும் தீர்மானிக்கும்.இந்திய பாதுகாப்புத் துறையின் இந்த முடிவு சீனா உடனான எல்லைப் பிரச்சனையின் பின்னணியில் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதனாலேயே கொரோனா நெருக்கடிக்கு இடையிலும் 43 ஆயிரம் கோடி ரூபாயை நீர்மூழ்கி கப்பல் தயாரிப்புக்கு செலவிட ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.