india

img

3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும்...கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூட மனமிறங்கினார்...

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, விவசாயிகள் நடத்தும் போராட்டம் 96 நாட்களைக் கடந்து விட்டது. போராட்டக் களத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் உயிரை விட்டுள்ளனர். எனினும், மோடி அரசுக்கு கொஞ்சமும் மனம் இறங்கவில்லை.

பிரதமர் மோடிக்கு நெருக்கமான கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூட, விவசாயிகள் மீது இரக்கப்பட்டு, வேளாண் சட்டங்களை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.ஹரியானாவின் சமல்காவில் நடைபெற்ற தொழிலதிபர் ஒருவரின் திருமணத்தில் சாமியார் ராம்தேவ் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது, அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவோ அல்லது ஒப்பந்த விவசாயியாகவோ தில்லி போராட்டம் குறித்து நான் பேச விரும்பவில்லை என்றும், மாறாக, இப்பிரச்சனையில் தான் ஒரு தீர்வைக் காண விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், புதிய வேளாண் சட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ராம்தேவ், விவசாயிகளும் அரசாங்கத்துடன் அமர்ந்து, விவசாயக் கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.தங்கள் நிலைப்பாட்டில் சிறிய தளர்வை ஏற்படுத்திக்கொள்ள அரசும் தயாராக இல்லை, விவசாயிகளும் தயாராக இல்லை என கூறியுள்ள ராம்தேவ், இந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.