போபால்:
பிற மாநில விவசாயிகள், தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பதற் காக, மத்தியப் பிரதேசத்திற்குள் வந்தால் அவர்களைச் சிறையில் அடைப்பேன் என்றுஅம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்துள்ளார்.விவசாயிகள் தங்களின் பொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம்; அதற்குத்தான் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூவிவரும் நிலையில், அதே பாஜகவைச் சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வேறுமாநில விவசாயிகள் யாரும், எங்கள் மாநிலத்திற்கு வந்துவிடாதீர்கள், மீறிவந்தால் சிறைதான் என்று மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மத்திய பாஜக அரசானது, இந்திய விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரான3 சட்டங்களை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாஜக கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலிதளமும் இந்த சட்டங்களை எதிர்த்தது. தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்தது. ஒருகட்டத்தில் கூட்டணியிலிருந் தும் வெளியேறியது. ஆனால், அவை எதையும் மோடி அரசு கண்டுகொள்ளவில்லை.தற்போது மோடி அரசின் சட்டங்களை எதிர்த்து, பல லட்சம் விவசாயிகள், தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு உலகையேதிரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள்ஆதரவு வலுத்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவங்கி, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் என பலரும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்றுவலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.ஆனால், வேளாண் சட்டங்களை ரத்துசெய்யும் பேச்சிற்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்ல 3 வேளாண் சட்டங்களும் உண்மையில் நல்ல சட்டங்கள்; எதிர்க்கட்சிகள்தான் அதனைத் தவறாக பிரச்சாரம் செய்கின்றன என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டப்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட் களை நாட்டின் எந்த பகுதியிலும் சென்று விற்க முடியும்; இதை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என்ற ஒரு வாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்தார்.ஆனால், உள்ளூரில் தங்களின் வேளாண் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்குமா? அதற்கு உத்தரவாதம்அளிப்பதற்கு அரசு தயாரா? என்று விவசாயிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இவற்றுக்கு இடையேதான், வெளிமாநில விவசாயிகள் யாராவது, தங்கள் மாநிலத்திற்குள் விளைபொருட்களை விற்கவந்தால், அவர்களை சிறையில் அடைப்பேன் என்று பாஜக மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் மிரட்டல் விடுத்துள்ளார்.மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் நஸ்ருல்லகஞ்சில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் சிவராஜ் சிங் சவுகான் உரையாற்றியுள்ளார்.அப்போது, ‘மத்தியப்பிரதேச மாநிலத்தில் சாகுபடியாகும் விவசாயப் பொருட்களை, இங்கேயே விற்பனை செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன். அத்துடன், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், நமது மாநிலத்திற்கு வந்து,தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்ய முயன்றால், அவர்களின் லாரிகளைபறிமுதல் செய்வோம்; அந்த விவசாயிகளைசிறையில் அடைப்போம்’ என்றும் கூறியுள் ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் அவர்களின் விளைபொருட்களை நாட்டின் எந்த பகுதியிலும் விற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய பாஜக அரசும், பிரதமர் மோடியும் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு வரும் விவசாயிகளை சிறையில் அடைப்பேன் என்று அதே பாஜக-வைச் சேர்ந்த முதல்வர் மிரட்டுகிறார். இதில் எது உண்மை; ஏன், இந்த இரட்டைவேடம்? யாரை இவர்கள் ஏமாற்றுகிறார்கள்? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.