நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு அடி பணிந்து, வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-ஐ ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது.
வழக்கறிஞர் திருத்த மசோதா 2025, கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று சட்ட விவகாரத் துறையின் இணையதளத்தில் பொதுமக்களின் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டது. இதை அடுத்து, இந்த வழக்கறிஞர்கள் திருத்த மசோதாவுக்கு இந்திய பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டத் தொழிலுக்கு கடுமையான தாக்கங்களையும், வழக்கறிஞர்களின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் 2025-வழக்கறிஞர்கள் திருத்த வரைவு மசோதா இருப்பது அதிர்ச்சி அளிக்கிறதாகவும், ஆட்சேபனைக்குரிய வரைவு விதிகளை நீக்கவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டங்களையும் சட்ட சவால்களையும் சந்திக்க நேரிடும் என இந்திய பார் கவுன்சில் தெரிவித்திருந்தது.
நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் சட்டத்திருத்த வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பிப்ரவரி 26 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்திருந்தனர். சென்னையில் நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்திற்கு அடி பணிந்து, வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-ஐ ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.