புதுதில்லி, மே 16 - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சட்டவிரோத பணப்பரி மாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு எதி ராக 2023 ஆகஸ்டில் 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப் பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப் பட்ட புதிய மனு, கடந்த மே 6 அன்று விசார ணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், இந்த விவகாரத்தில் விரி வான வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி புதன்கிழமை விசாரணை யின் போது அமலாக்கத்துறையின் சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடர்புடைய வேறொரு வழக்கில் ஆஜ ரானதால் இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (மே 16) ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் வியாழனன்றும் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விசார ணைக்கு ஆஜராகவில்லை. சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு வழக்கில் ஆஜரானதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று அம லாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
மே 18 முதல் ஜூலை 7 வரை உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை என்பதால், அதனைக் கணக்கில் கொண்டே அமலாக்கத்துறை அவகாசம் கோரியது. இதன்மூலம் செந்தில் பாலாஜி யின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 2 மாதங்களுக்கு இழுத்தடித்து விடலாம் என்பது அவர்களின் மறைமுகத் திட்ட மாக இருந்தது.
இதனாலேயே, அமலாக்கத்துறை கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை யாவது (மே 17) நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா, உஜ்ஜால் புயான் அமர்வு இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.