india

img

‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திசைதிருப்பும் வேலை

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தினை முன்வைத்து ஜூன் 19 புதனன்று பிரதமர் நரேந்திர மோடி , நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தை புதனன்று கூட்டியிருந்தார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று கட்சியின் சார்பில் விரிவான குறிப்பினை சமர்பித்து பேசினார்.ஒரே நாடு ஒரே தேர்தல்  என்ற முழக்கத்திற்கு உறுதியான எதிர்ப்பினை தெரிவித்த அவர் இந்த முழக்கம் அடிப்படையில் ஜனநாயக விரோதமானது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதை திட்டவட்டமான முறையில் எடுத்துரைத்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை மற்றும் அதில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பான பிரச்சனைகளையும் கூட்டத்தில் எழுப்பிய அவர், தேர்தல்களில் அளவிட முடியாத அளவிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பணத்தின் அதிகாரம் அதிகரித்திருப்பதும், சட்ட விரோத முறையில் தேர்தல்நிதி ஆதாயங்கள்  பெறப்படுவதும், இவற்றில் எல்லாம் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கையாகாலாத தன்மையும், தேர்தல் ஆணையம் நியமிக்கப்படுகிற முறையும் உள்பட அனைத்து பிரச்சனைகளையும் எழுப்பினர். 

இக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிநிரலில் ஐந்து பொருள்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. (1) நாடாளுமன்றத்தின் உற்பத்தித்திறனை (productivity) மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்; (2) ஒரு நாடு, ஒரு தேர்தல்; (3) சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டில் புதியதோர் இந்தியாவைக் கட்டி எழுப்புவது தொடர்பாக; (4) மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடுவது தொடர்பாக திட்டம் தீட்டுதல் மற்றும் உறுதிமொழிகள் மேற்கொள்ளுதல்(programme and commitments); மற்றும் (5) விருப்புத்தேர்வு செய்யப்பட்டுள்ள (aspirational) மாவட்டங்களின் வளர்ச்சி.

மேலும் அரசாங்கத்தின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கான பிரச்சனைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்குமாறும் கேட்டிருந்ததது. இவை அனைத்தையும் உள்ளடக்கி மேற்கண்ட கூட்டத்தில் மத்திய அரசிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சமர்ப்பித்த குறிப்பின் முதல் பகுதி பின்வருமாறு 

1. ஒரு நாடு, ஒரு தேர்தல்

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக தொழில்நுட்பப் பிரச்சனைகளுக்கும் அப்பாற்பட்டு, இவ்வாறு தேர்தல் நடத்துவது என்பது, அடிப்படையில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் அரசமைப்புச்சட்டத்தால் வரையறுத்து அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாபக அமைப்புமுறையின் ஆணிவேரையே அறுத்தெறிவதற்கு ஒப்பானது என்கிற அடிப்படையான காரணங்களால் அதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்.

ஆரம்பத்தில், நாம் நம்முடைய அரசமைப்புச்சட்டத்தை நிறைவேற்றியபின்னர் தேர்தல்கள் ஒரேசமயத்தில்தான் நடந்தன. எனினும், மத்திய அரசாங்கத்தால் அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவு தான்தோன்றித்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் விளைவாக, பொதுத்தேர்தல்களுடன் சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுவது துண்டிக்கப்பட வேண்டியதாயிற்று. இத்தகைய நடைமுறை 1959இல் கேரளாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை டிஸ்மிஸ் செய்யப்பட்டதிலிருந்து தொடங்கியது.  

நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்ற பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது என்பது அரசாங்கங்கள் அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள பொறுப்புகளைச் செய்திடாமல் கெடுப்பதற்கு இட்டுச்செல்லும். அரசமைப்புச் சட்டத்தின் 75(3)ஆவது பிரிவு, மக்களவைக்கு மத்திய அமைச்சரவைப் பதில் சொல்வது, கூட்டுப் பொறுப்பு என்கிறது. அதேபோன்று, அரசமைப்புச் சட்டத்தின் 164(1)ஆவது பிரிவு, மாநில சட்டமன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர்கள் பதில் சொல்வது கூட்டுப் பொறுப்பு ஆகும்.

அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஓர் அரசாங்கம், ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலமாகவோ, அல்லது, நிதிச்சட்டமுன்வடிவில் வாக்கெப்பில் தோல்வியுறுவதன் மூலமாகவோ, நாடாளுமன்ற/சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்குமானால், அது ராஜினாமா செய்யக் கடப்பாடு உடையது. இதற்குப் பதிலாக மாற்று அரசாங்கம் அமைக்க முடியவில்லை என்றால், அவை (மக்களவை அல்லது சட்டமன்றப் பேரவை) கலைக்கப்பட்டு, ஓர் இடைத் தேர்தல் நடத்திட வேண்டும்.

அரசமைப்புச்சட்டத்தில் மக்களவைக்கோ அல்லது மாநில சட்டமன்ற பேரவைகளுக்கோ, காலநிர்ணயம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 83(2) மற்றும் 172(1)  ஆகிய பிரிவுகள் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஆட்சிக்காலம்,  (இடையில் அவை கலைக்கப்படாவிட்டால்”)ஐந்தாண்டுகளாக இருக்கும் என்று வரையறுத்திருக்கின்றன.

மக்களவை அல்லது மாநில சட்டமன்றங்களின் ஆட்சிக் காலத்தை நீட்டிப்பதற்காக ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அது அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரான செயல் மட்டுமல்ல, ஜனநாயக விரோத செயலுமாகும். மக்களின் தீர்ப்பே, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக, நிலை நிறுத்தப்பட வேண்டும்.

ஒரே சமயத்தில் தேர்தல்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திட எண்ணற்ற பரிந்துரைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.  நிட்டி ஆயோக் வெளியிட்டிருக்கிற விவாதத் தாளில் காணப்பட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்று, மக்களவை தவிர்க்கப்பட முடியாதவிதத்தில் கலைக்கப்பட்டால், மக்களவையின் எஞ்சிய ஆட்சிக்காலம் நீண்ட காலத்திற்கானதாக இல்லையெனில், பின், நாட்டின் நிர்வாகத்தை, அடுத்த மக்களவை அமைக்கப்படும் வரையிலும், அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியின் கீழ்  குடியரசுத் தலைவரே நிறைவேற்றிடக் கூடிய விதத்தில், திருத்தம் கொண்டுவரப் படவேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்த மூர்க்கத்தனமான (outrageous) முன்மொழிவு குடியரசுத்தலைவரை அரசுக்குத் தலைமையேற்கச் செய்கிறது. இது கொல்லைப்புற வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வருகின்றது.   

மற்றொரு முன்மொழிவு, அவை (மக்களவை அல்லது சட்டமன்றப் பேரவை) கலைக்கப்படும் சமயத்தில் அதன்  ஆட்சிக்காலம் கூடுதலாக இருக்குமானால், பின், புதிதாகத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மீதமுள்ள ஆட்சிக்காலத்திற்கு மட்டுமே அதன் உயிர் இருக்கும் என்றும் கூறுகிறது. அதாவது, அவை தன்னுடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் இரண்டாண்டு காலத்தை செலவு செய்தபின், மீதம் மூன்று ஆண்டு காலம் இருக்கும்பட்சத்தில், பின்னர் நடைபெறும் தேர்தல் மீதமுள்ள மூன்று ஆண்டு காலத்திற்கு மட்டுமே பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் என்கிறது. ஆகையால், இது நடைமுறையில், அடிக்கடி மக்களவைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கே இட்டுச் செல்லும்.  எனவே இது, இப்போது இவர்களால் மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில்  தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு  சொல்லப் படுகின்ற காரணங்கள் அனைத்தையும் தகர்த்துவிடுகிறது.

அடுத்ததாக, மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான முயற்சிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மற்றுமொன்று, கூட்டாட்சித் (federalism) தத்துவமாகும். மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக, சில சட்டமன்றங்களின் ஆயுள்காலத்தை படிப்படியாக நீட்டித்திடலாம், அல்லது, குறைத்திடலாம் என்றும் ஒரு முன்மொழிவு, 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக் குழுவின் 79ஆவது அறிக்கையாலும், நிட்டி ஆயோக் ஆவணங்களாலும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு சட்டமன்றத்தின் ஆயுள் காலத்தை நீட்டிப்பதோ, அல்லது, குறைப்பதோ மாநிலங்களின் உரிமைகளின் மீதான தாக்குதலேயாகும், அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்திடும் மக்களின் உரிமைகளையும் சுருக்குவதேயாகும்.

சட்டமன்றப் பேரவைகள் தொடர்பாக அளிக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு பரிந்துரை, மாநில அரசின் ஆட்சிக் காலத்தின் பெரும்பகுதி முடிந்த நிலையில் பேரவை கலைக்கப்பட்டால், மீதமுள்ள ஆயுள்காலத்திற்கு ஆளுநரே மாநிலத்தை ஆளலாம் என்பதாகும். இதன் பொருள், மத்திய ஆட்சி அம்மாநிலத்தில் திணிக்கப் படுகிறது என்பதேயாகும்.

நாடாளுமன்றம்/சட்டமன்றங்களுக்கு அரசு பதில் சொல்வதைத் தந்திரமாகத் தவிர்க்கும் விதத்திலும், அவையின் ஆயுள்காலத்தை உத்தரவாதப்படுத்துவதை சிதைக்கும் விதத்திலும் எண்ணற்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முன்மொழியப்பட்டிருக்கிற முன்மொழிவுகளில் ஒன்று, அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்பட்சத்தில், ஒருவேளை அத்தீர்மானம் வெற்றிபெறுமானால், அவைக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானத்தையும் அத்துடன் சேர்த்தே கொண்டுவர வேண்டும் என்கிறது. இதன் பொருள் என்னவென்றால், அரசாங்கத்தை அப்புறப்படுத்துவதற்கு உறுப்பினர்களுக்கு இருந்துவரும் உரிமைகளை அவர்களிடமிருந்து தந்திரமாகப் பறிப்பது என்பதும் மற்றும் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு நிபந்தனைகளை அவர்களுக்கு விதிப்பது என்பதுமேயாகும்.

எந்தவொரு அரசாங்கத்தையும் ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்றிட மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்ற உரிமைகளைப் பறிப்பதோ அல்லது உறுதியான பெரும்பான்மை உள்ள ஆளும் கட்சி, அவையைக் கலைப்பதற்குப் பரிந்துரைப்பதையோ மற்றும் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோருவதையோ வெட்டிச்சுருக்கிடக் கூடாது.

  ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துகிறோம் என்ற பெயரில், இந்த முன்மொழிவுகள் அனைத்தும் ஆளுநரின் பங்கினையும், மத்திய ஆட்சியாளர்களின் தலையீட்டையும் அதிகரிக்கின்றன.

இந்தியா, எண்ணற்ற வேற்றுமைகளுடன் கூடிய ஒரு மாபெரும் நாடு. எனவே நம் நாட்டில் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த அரசியல் ஜனநாயகமே நிலைத்து நீடித்திட முடியும். மாநிலங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் தேர்தல்கள் நடத்துவது என்பதும் கூட்டாட்சி அமைப்புமுறையில் ஓர் அம்சமாகும்.  

எனவே, ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவது பற்றி கொண்டுவரப்படுகின்ற செயற்கையான முயற்சி எதுவாக இருந்தாலும் அதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இது, தற்போது இருந்துவருகின்ற அரசமைப்புச்சட்டத்தின்  கீழான நாடாளுமன்ற ஜனநாயகத்தை மிதித்து நசுக்குவதன் மூலமே செய்திட முடியும்.  

தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பும், தேர்தல் சீர்திருத்தங்களும்

இந்திய அரசைமைப்புச் சட்டம், நாட்டில் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே பொறுப்பை அளித்திருக்கிறது. 17ஆவது பொதுத் தேர்தல்களின்போது தேர்தல் ஆணையம் நடந்துகொண்டவிதம் அதன்மீது மிகவும் மோசமான விதத்தில் இருந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நடுவுநிலைமை மற்றும் பாரபட்சமின்மை மிகவும் விரிவான அளவிற்குக் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறது.  

இத்தகைய அனுபவத்தின் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சியிலுள்ளவர்கள் தேர்தல் ஆணையர்களை நியமித்திடும் தற்போதைய நடைமுறை அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக, குடியரசுத்தலைவரின் ஒப்புதலின் கீழ் கொலிஜியம் முறை கொண்டுவரப்பட்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்கிற கருத்தை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தகைய நடைமுறையைத்தான் லோக்பால் நியமனத்தில், நாடாளுமன்றம் பின்பற்றுகிறது.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு மிகப் பெரிய அளவில் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

மின்னணு எந்திரங்கள்: தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை, மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்துவதன் மூலம் மிகவும் விரிவான அளவில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. பல இடங்களில் அதனுடைய முரண்பாடுகளை வெளிக்கொணர்ந் திருக்கிறார்கள். மின்னணு வாக்கு எந்திரங்களின்மூலம் எண்ணப்படும் வாக்குகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம்,.  வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை (விவிபேட் (VVPAD)) மூலம் எண்ணப்படுவதை, நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றுவதன் மூலம் உத்தரவாதப்படுத்திட வேண்டும். மேலும், மனித வல்லமையைவிட வேகமாக தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பதன் காரணமாக  எழுந்துள்ள அனைத்துத் தொழில்நுட்ப ஆட்சேபணைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். எனவே, மின்னணு சாதனங்களின் நம்பகத்தன்மையையும், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனையின் சரிபார்ப்புத்தன்மையையும் மறுஆய்வுக்கு உட்படுத்திட வேண்டியது அவசியமாகும்.  

பண பலம்: இந்தத் தேர்தல்களில் பண பலம் மிகப்பெரிய அளவில் புழங்கியதைப் பார்த்தோம். ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருக்கிற வாக்காளரின் பகுத்தறிந்து வாக்களிக்கும் சிந்தனையை இது சீர்குலைக்கிறது. பணபலத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திட சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இதனைத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தைத் தடை செய்வதிலிருந்து தொடங்கிட வேண்டும். தேர்தல்நிதித் திட்டம் என்பது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவரப்பட்டது. மாநிலங்களவையின் கருத்தக்களை புறந்தள்ளவேண்டும் என்பதற்காகவே இது ஒரு ‘நிதிச்சட்டமுன்வடிவின்’ வழியாக நிறைவேற்றப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் நிதியளிப்பது தடை செய்யப்பட வேண்டும். தேர்தல் நடத்திட அரசாங்கமே நிதி அளிக்கும் முறை கொண்டுவரப்பட வேண்டும்.

பகுதி விகிதாசார பிரதிநிதித்துவம்(Partial Proportional Representation):

இந்தியாவில் நாம் நம் அரசமைப்புச்சட்டத்தை நிறைவேற்றியபின்னர்  மத்தியில் அமைந்த ஆட்சி எதுவுமே 50 சதவீத மக்களுக்கும் மேலானவர்களின் ஆதரவுடன் வாக்குகளைப் பெற்று அமைந்திடவில்லை. உலகில் பல நாடுகள், தங்கள் ஆட்சியாளர்களை 50 சதவீத பகுதி விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலேயேயும், 50 சதவீதம் ஒட்டுமொத்த வாக்காளர்களின் ஆதரவோடும் தேர்ந்தெடுக்கின்றனர். ஜனநாயகம் என்பது அதன் வரையறையின்படி பெரும்பான்மையினரின் ஆட்சி என்பதாகும். அத்தகைய ஜனநாயகத்தை முறையாக நிறுவிடுவதற்காக, நாடு, பகுதி விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்புமுறையை ஆழமாகப் பரிசீலித்திட வேண்டும்.  

மேலும் பல விஷயங்களும் விவாதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் சீர்திருத்தங்களை மிகவும் ஆழமானமுறையில் பரிந்துரைத்திடுவதற்காக, ஒரு நாடாளுமன்ற அமைப்பினை உடனடியாக அமைத்திட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்திடவும், நேர்மையானதாகவும் மீளவும் மாற்றியமைத்திடவும் இத்தகைய சீர்திருத்தங்கள் அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.   

(தொடரும்)

      

 

;