மணிப்பூரில் தற்போதைய நிலவரம் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் மெய்டெய் சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே கடந்த இரு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆனால், இதுவரையில் பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் தொடர்பாக வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது. அப்போது, மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதாக ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இதையடுத்து மணிப்பூரில் தற்போதைய நிலவரம் குறித்து புதிய அறிக்கை ஒன்றை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை ஜூலை 10-ஆம் தேதித்திக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.