புதுதில்லி, மார்ச் 23- இசைத்துறையில் டிஜிடல் திருட்டைத் தடுத்திட ஒன்றிய அரசு சட்டம் எதுவும் இயற்றிடவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், இசைத்துறையில் டிஜிடல் திருட்டைத் தடுத்திட, ஒன்றிய அரசாங்கம், 2021ஆம் ஆண்டு சினிமா-ஆட்டோகிராபி (திருத்தச்) சட்டமுன்வடிவு என்ற பெயரில் ஏதேனும் சட்டமுன்வடிவைக் கொண்டுவர உத்தேசித்துள்ளதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கூறியதாவது:
இசைத் துறையில் டிஜிடல் திருட்டைத் தடுத்திடுவது தொடர்பாக ஒன்றிய அரசாங்கத்தின்கீழ் தரவு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
2021ஆம் ஆண்டு சினிமா-ஆட்டோகிராபி (திருத்தச்) சட்டமுன்வடிவு என்ற பெயரில் எவ்விதமான சட்டமுன்வடிவையும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்திடவில்லை. எனினும், 2019ஆம் ஆண்டு சினிமாடோகிராப் (திருத்தச்) சட்டமுன்வடிவின்கீழ் சினிமாவைத் திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கான சட்டமுன்வடிவு மாநிலங்களவையில் 2019 பிப்ரவரி 12 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
(ந.நி.)