india

img

மோசடியான திட்டங்கள் மூலம் விவசாயிகளை முட்டாள்களாக்குகிறது

மத்திய அரசு மீது ஏ.எம் ஆரிப் குற்றச்சாட்டு

புதுதில்லி, டிச.6- மரண விளையாட்டாக மாறிப்போய்விட்டது விவசாயம் என்றும் மத்திய அரசு மோசடியான திட்டங்களின் மூலம் விவசாயிகளை முட்டாள்க ளாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வியாழக்கிழமையன்று மக்களவையில் பல்வகைக் காரணங்களால் ஏற்பட்டுள்ள பயிர்கள் நாசம் மற்றும் அதன் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னும் தலைப்பில் குறு கியகால விவாதம் நடைபெற்றது. இந்த விவா தத்தில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது: நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக் கூடிய விவசாயம் மிகப்பெரிய அளவில் நெருக்கடி யைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை யான காரணங்களோடு மனிதர்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள காரணங்களும் இதற்குப் பொறுப்பாகும். இயற்கையான காரணங்கள் என்று சொல்கிறபோது வெள்ளம், வறட்சி, புயல், பயிர்களைப் பாதித்திடும் நோய்கள் போன்றவைகளாகும். ஆனாலும், நிலை மைகள் மேலும் மோசமானதற்கு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளும் காரணங்க ளாகும் என்றே நான் கருதுகிறேன். மத்திய அரசாங் கத்தின் கொள்கைகள்தான் வேளாண் நெருக்கடியை அதிகப்படுத்தியதற்கான காரணங்கள் என்று வருத்தத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வேளாண் பொருள்களின் விலைவாசி உயர்ந்துகொண்டிருக்கின்றன. எனினும் அதனை விளைவித்த விவசாயிகள் வறுமையில்தான் இப் போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அரசாங் கத்தின் விவசாயிகள் விரோதக் கொள்கைகள் நம் விவசாயிகளை ஈவிரக்கமின்றி நசுக்கிக் கொண்டி ருக்கின்றன. இவற்றிலிருந்து மீள்வதற்கு அவர்க ளுக்கிருக்கின்ற ஒரே வழி, தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வது என்பதேயாகும். மின் கட்டண உயர்வுகள், நேர்மையற்ற இறக்குமதிக் கொள்கைகள், இரசாயன உரங்களின் விலை உயர்வுகள் அனைத் தும் இந்நெருக்கடிக்குக் காரணங்களாகும். அதே சமயத்தில், பணவீக்கமும் நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மரண விளையாட்டால்

2016 பிப்ரவரியில் உத்தரப்பிரதேசத்தில் பரேலி யில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பேசிய பிரதமர், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப் படுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தார். ஆனால் இன்றைய தினம் விவசாயிகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சித்திரத்தை இங்கே உள்ள நாம் அனைவரும் நன்கறிவோம். இந்தியாவில் இன்றைய தினம் விவசாயம் என்பது ஒரு மரண விளையாட்டாக (death game) மாறிப்போயுள்ளது. கடந்த மூன் றாண்டுகளில் மட்டும், மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள் என்கிற செய்தி நம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் நிலைமை குறித்து மதிப்பீடு செய்த சமீபத்திய தேசிய மாதிரி சர்வேயானது, நாட்டில் உள்ள விவசாயிகளில் 40 சதவீதத்தினர் விவசாயத்தை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்று கூறியிருக்கிறது.

ரூ.5 ஆயிரம் கோடி  வழங்காமல் இழுத்தடிப்பு

பயிர் விளைச்சலில் தோல்வி என்பது ஒவ்வோ ராண்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. வறட்சி யினாலோ அல்லது வெள்ளத்தினாலோ அல்லது இதர பருவநிலை மாற்றங்களினாலோ இவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அர சாங்கத்தின் தரப்பில் மிகவும் படாடோபமாக அறி விக்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கதி என்ன? பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத் தின்கீழ் இயங்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயிர்ச் சேதம் குறித்து அங்கீகரிப்பதற்கான காலக் கெடுவை நீட்டித்துக்கொண்டே செல்கின்றன. இதன் காரணமாக, விவசாயிகளால் கோரப்பட்டுள்ள ஐயாயிரம் கோடி ரூபாயை இன்னமும் அவர்களுக்கு வழங்கிடாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின் றன. பயிர் காப்பீட்டுத்தொகையை அவர்களுக்கு அளிக்கத் தவறுவதும் வேளாண் நெருக்கடியை மேலும் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் விவசாயிகளை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு விவசாயிகள் வெறும் வாக்கு வங்கி மட்டுமேயாகும்.

இதில் இடைத்தரகர்களைச் சமாளிப்பதில் தோல்வி கண்டிருப்பதும் மற்றுமொரு பெரிய பிரச்ச னையாகும். இது தொடர்பாக அரசாங்கம் படு தோல்வி அடைந்திருக்கிறது. பல சமயங்களில் குண்டர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக 90 சதவீத லாபத் தொகையை இடைத்தரகர்கள் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இடைத்தர கர்கள் அமைப்புமுறையை ஒழித்துக்கட்ட அர சாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

விவசாயிக்குச்சேராது 

இன்றைய தினம் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு 160 ரூபாயை எட்டியிருக்கிறது.   எனி னும் ஒரு விவசாயிக்குக் கூட இந்தத் தொகை போய்ச் சேராது. கேரள விவசாயத்துறை வேறுவிதமான சவால்க ளை பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், மத்திய அரசாங்கத்தின் நேர்மையற்ற இறக்கு மதிக் கொள்கைகளின் விளைவாகவும் எதிர் கொண்டு வருகிறது. 2016இல் கேரள விவசாயிகள் கடந்த 115 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வறட்சி நிலைமையை எதிர்த்துப் போரா டினார்கள். 2018இலும் 2019இலும் கேரளம், இரு வெள்ள நிலைமைகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. இதுபோன்ற நிலைமை கேரள வரலாற்றில் இதற்குமுன்னெப்போதும் ஏற்பட்ட தில்லை.  இத்தகு சவால்களை எதிர்த்து முறியடித்து முன்னேற கேரளம் போராடிக் கொண்டிருக்கிறது. விவசாய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் விவ சாயிகளுக்கு, வேளாண் விளைபொருள்களுக் கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது, தேசியப் பேரிடர்களுக்கு எதிராக இன்சூரன்ஸ் திட்டங்களைக் கொண்டுவருவது, விவசாயக் கடன்களை ரத்து செய்வது போன்றவை ஒருசில தற்காலிகத் தீர்வுகளாகும். 

ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை  

கேரளாவில், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயி கள் ஒவ்வொரு மாதமும் 1300 ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் விரிவான அளவில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஆயிரக்கணக் கான ஹெக்டேர் நிலங்கள் பயன்படுத்தப்பட முடியா தவைகளாக மாறி இருக்கின்றன. இதனைச் சரி செய்வதற்காக கேரள மாநில அரசு 2,101 கோடி ரூபாய் மத்திய அரசைக் கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ ஒரு ரூபாய் கூட தன்னுடைய அவசர கால நிவாரண நிதியிலிருந்து (Emergency Relief Fund) அளிக்க முன்வரவில்லை. விவசாயத்தை ஒரு நிலையான வர்த்தகமாக மாற்றுவதற்கு ஏற்றவிதத்தில் கொள்கை நடவ டிக்கைகளை எடுப்பதன் மூலமாகத்தான் விவசா யத்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு நிரந்த ரத் தீர்வினை எய்திட முடியும்.  விவசாயிகள் உற்பத்தி செய்திடும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறி கள் மற்றும் இதர உற்பத்திப் பொருள்களின் இழப்புகளைக் குறைத்திடும் விதத்தில் ஒரு சிறந்த கட்டமைப்பு வசதியை உருவாக்கிட பட்ஜெட்டில் வழிவகை காண வேண்டும்.  

இவ்வாறு ஏ.எம். ஆரிப் கூறினார். (ந.நி)


 

;