india

img

நாளை நாடு முழுவதும் மோடி அரசு..., அம்பானி, அதானி கொடும்பாவிகள் எரிப்பு.... அனைத்து விவசாய சங்கங்கள் அறைகூவல்...

புதுதில்லி:
விவசாயிகள் விரோத வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  டிசம்பர் 5 சனிக்கிழமையன்று அனைத்துக் கிராமங்களிலும் நரேந்திர மோடிஅரசாங்கம் மற்றும் அதன் கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகளான அம்பானி, அதானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்கும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (ஒன்றுபட்ட விவசாயிகள் விடுதலை) என்னும் ஒருங்கிணைந்த விவசாயிகளின் சங்கங் கள் அறைகூவல் விடுத்துள்ளன.
இதுதொடர்பாக அகில இந்தியவிவசாயிகள் சங்கம்  வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

டிசம்பர் 2 புதன்கிழமையன்று மாலை அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் பணிக்குழு, பஞ்சாப்கிசான் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு, ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம் மற்றும் பாரதிய கிசான்யூனியனின் பல்வேறு குழுக்கள் சார்பில் தில்லி, சிங்கூ எல்லையில்கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘தில்லி செல்வோம்’ என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தை யும், நாடு முழுவதும் நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களையும்,  ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (ஒன்றுபட்ட விவசாயிகள் விடுதலை) என்னும் பதாகையின்கீழ் தீவிரப்படுத்துவது என்றுதீர்மானிக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்துள்ள இப்போராட்டத்தில் சுமார் 3 கோடி விவசாயிகள் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார்கள். கிசான் சங்கங்களின் கூட்டுத் தலைமையைப் பிளவுபடுத்திடவும், இவ்வாறு வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் போராட்டத்தை நசுக்குவதற்காக மக்கள் மத்தியில் தவறானவழியில் திசைதிருப்பும் வேலையிலும் மோடி அரசாங்கம் அடாவடித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டமாக...
1. கார்ப்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார சட்டமுன்வடிவு ஆகியவற்றை ரத்து செய்திடும் கோரிக்கையில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ சார்பில் அரசாங்கத்திற்கு எழுத்துபூர்வமாக ஒரு கடிதம் கொடுக்கப்படும். அந்தக் கடிதத்தை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக்கொண்டு, போராட்டத்தைத் தீர்த்துவைக்க வேண்டும்.

2. மேற்படி சட்டங்கள் மீதான ஆழமான விமர்சனங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றின் மீது ஒவ்வொரு பிரிவின் மீதும் தனித்தனியே விவாதம் அனுமதித்திடக் கூடாது.

3.விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கு வதற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், அனைத்துக் கிராமங்களிலும் டிசம்பர் 5 அன்று  நரேந்திர மோடி அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் ஜாம்பவான்கள் அம்பானி,அதானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்கும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, இப்போராட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டமாக பரிணமிக்கும்.4. நாடு முழுவதும் நடந்துவரும் இப்போராட்டத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட சமூகத்தின் இதர பிரிவினரையும் இணைத்துக்கொள்ளப்படுவது தீவிரமாக்கப்பட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. (ந.நி.)

                         ***********************

சிபிஎம் தலைவர்களை தாக்கி சிறையில் அடைப்பு... கடலூர் காவல்துறையின் அராஜகத்திற்கு கண்டனம்

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் புதுதில்லியில் திரண்டு போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பொதுமக்களும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பி வரும் நிலையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. இவ்வியக்கங்களை முடக்குவதற்கு காவல்துறையினர் தடுப்பு வேலி அமைப்பது,  முன்னணி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று கூட பாராமல் தடியடி நடத்துவது, தாக்குவது, பொய்வழக்கு புனைவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 01.12.2020 அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் கடலூர் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், விவசாயிகள் அமைப்பைச் சார்ந்தவர்களையும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வழியிலேயே தடுத்து கீழே தள்ளியுள்ளனர். காவலர்களின் முரட்டுத்தனத்தால் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அங்கும் அராஜகமான முறையில் மிரட்டியுள்ளனர். 

இதனைக் கண்டித்து அனைவரும் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். மேலும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 12 பேர் மீது பொய் வழக்கு புனைந்ததுடன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ. மாதவன், நகரச் செயலாளர் ஆர். அமர்நாத், ஒன்றியச்செயலாளர் ஜெ. ராஜேஸ்கண்ணன், வாலிபர் சங்க நகரச் செயலாளர் டி.எஸ். தமிழ்மணி, நகர்க்குழு உறுப்பினர்செந்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் ஆகிய 6 பேரை கைது செய்து சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையின் இத்தகையஜனநாயக விரோத, கண்மூடித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, படுகாயம் ஏற்படுத்திபின்னர் பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய கடலூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

;