புதுதில்லி:
விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள பஞ்சாப்பைச் சேர்ந்த சங்கங்களில் சிலவற்றுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்ததை, பஞ்சாப் விவசாய சங்கங்கள் நிராகரித்ததையொட்டி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா உட்பட மேலும் மூவருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
மத்திய அரசு மேலும் மூன்று விவசாய சங்கங்களின் தலைவர்களுக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறது. அவ்வாறு அழைக்கப்பட்ட சங்கங்களில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லாவும் ஒருவர். இத்துடன் அரியானாவைச் சேர்ந்த குர்ணாம் சிங் சாதுனி மற்றும் மகாராஷ்டிரா ராஷ்ட்ரிய கிசான் மகாசங்கத்தின் சிவ குமார் காக்காஜி ஷர்மா ஆகியோரும் அழைக்கப்பட்டனர் என்று பல விவசாய சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை சந்திப்பார்கள் என்றும் அவர்கள் கூறினர். (ந.நி.)