india

img

பிரிஜ் பூஷணுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது:விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்

மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக தில்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொண்ட கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால், குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் ஜூலை 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 354, 354ஏ(பாலியல் துன்புறுத்தல்), 354டி(பின்தொடர்தல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் ஜூன் 15-ஆம் தேதி போலீசார் பிரிஜ் பூஷண் சிங் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.

குற்றப்பத்திரிகையில் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிச் செயலாளரான வினோத் தோமரின் பெயர் இடம்பெற்றுள்ளது.இவரது பெயர் சட்டப்பிரிவு 109(எந்தவொரு குற்றத்திற்கும் தூண்டுதல்) மற்றும் 354, 354ஏ மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்)ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போதைய வழக்கைத் தவிர, மைனர் மல்யுத்த வீரரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மைனர் வீராங்கனை பிரிஜ் புஷண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய 7 பெண்களில் ஒருவராவார்.

வெவ்வேறு நேரங்களிலும், இடங்களிலும் பெண் வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷண் தகாத முறையில் தொடுதல், துலாவுதல், பின்தொடர்தல் மற்றும் மிரட்டல் போன்ற பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக இந்த இரண்டு வழக்குகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மைனர் மல்யுத்த வீராங்கனை வழங்கில், பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தில்லி காவல்துறை ஜூன் 15-ஆம் தேதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

உரிய விசாரணைக்குப் பிறகு உறுதியான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கத் தவறிய வழக்குகளில் இதுபோன்று ரத்து செய்யக் கோரும் அறிக்கை காவல் துறையால் தாக்கல் செய்யப்படுகிறது.

இதனிடையே, மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை திடீர் திருப்பமாக, தானும் தனது மகளும் பிரிஜ் பூஷணுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குறித்து போலீசில் பொய் புகார் அளித்ததாகவும், தனது மகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்ததால் அதற்காக இந்தப் பொய் புகாரை அளித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சாட்சிகளை மிரட்டி பிறழ் சாட்சியாக மாற்றுவதில் பாஜகவினர் கை தேர்ந்தவர்கள்.இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் எனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என ஒரு இளம் மல்யுத்த வீராங்கனையின் தந்தையை மிரட்டி மாஜிஸ்திரேட் முன்பு சொல்ல வைத்துள்ளனர்.எனக்கு பலரிடமிருந்து மிரட்டல்கள் வந்தன. அவர்கள் பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும் எனது மகளை போட்டியில் போட்டியில் பங்கேற்கவிடாமல் செய்து விட்டதால், குடும்பமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது”என்றும் புகார்களைக் கூறிய ஒருவர் திடீரென மாற்றிப் பேசுகிறார் என்றால் அவருக்கு யாரால் என்ன நடந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை.

பாஜகவினரின் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் இடம் தராமல் மல்யுத்த வீராங்கனைகள் நீதிமன்றத்தில் துணிச்சலோடு போராட வேண்டும்.அவர்களுக்கு உறுதுணையாக ஒட்டுமொத்த நாடும் பின் நிற்க வேண்டும்.

 

;