ஐஸ்கிரீமுக்குப் பதிலாக இளநீர் ஜெல்லி, குளிர்பானத்துக்கு மாற்றாக பானகம் அல்லது பழச்சாறு அருந்துவது உடலுக்கு ஊட்டமும், மனதுக்கு உற்சாகமும் தருபவை;அசைவப் பிரியர்கள் நம் பாரம்பரிய நாட்டுக்கோழிக் குழம்பு, மீன் குழம்பு சாப்பிடலாம். ஆரோக்கியத்தின் ஆணிவேர் நாம் சாப்பிடும் உணவில்தான் இருக்கிறது. கடந்த கால் நுாற்றாண்டு காலமாக, நாகரிகச் சூழல் வளர வளர நம் உணவுமுறை மாறிக்கொண்டு வருகிறது. இந்தியப் பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தில், மேற்கத்திய உணவுகள் குடிபுகுந்துவிட்டன. உடல் சத்துக்காக சாப்பிட்ட காலம் போய் நாக்கின் சுவைக்காக சாப்பிடுவது என்றாகி விட்டது. துரித உணவுகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகள் என்று பலதரப்பட்டவை சாலையோரக் கடைகள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை விற்கப்படுகின்றன. புரோட்டா, நாண், நுாடுல்ஸ், ப்ரைடு ரைஸ், ருமாலி ரொட்டி, தந்துாரி சிக்கன் என இதுவரை நகர மக்களை மட்டுமே வசீகரித்து வந்த துரித உணவு மோகம் இப்போது கிராமங்களிலும் காணமுடிகிறது. இது ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தேசிய சத்துணவு வாரம் கொண்டாடப்படும் இந்த வேளையில், இந்த எச்சரிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
சமச்சீரான உணவு
ஆரோக்கியம் காக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது முக்கியம். உணவில் மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாமே இருக்க வேண்டிய விகிதங்களில் இருந்தால்தான் ஆரோக்கியம் வலுப்படும். இந்தச் சத்துக்கள் உள்ள உணவு கிடைக்காமல், ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுபவர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்ற நம் நாட்டில்தான், துரித உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு கலோரிகள் அதிகமாகி உடற்பருமன், இதயநோய், சர்க்கரை நோய் என்று பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பல கோடி பேர் இருக்கின்றனர். இரண்டாம் பிரிவினர் சமச்சீரான உணவுமுறைக்கு மாறினால் மட்டுமே ஆரோக்கியம் மீளும். இதற்கு மாவுச்சத்து 50 -- 60 சதவீதம், புரதச்சத்து 10 -- 15 சதவீதம், கொழுப்புச் சத்து 20- - 25 சதவீதம், மற்றவை 20 -- 25 சதவீதம் என்று இருக்கும்படியாக உணவைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் பலரும் விரும்பிச் சாப்பிடும் துரித உணவுகளில் மாவுச் சத்தும், கொழுப்பும் பல மடங்கு அதிகம்; வைட்டமினும் நார்ச்சத்தும் மிகக் குறைவு. அதுதான் ஆபத்தைத் தருகிறது.
ஒளிந்திருக்கும் ஆபத்துகள்
கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த துரித உணவுகளில், கலக்கப்படும் சாயங்கள் எல்லாமே ரசாயனங்கள். பெட்ரோலியம், தார் கெசோலின் போன்ற மூலப்பொருட்களால் ஆனவை. இவை சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. புற்றுநோயை வரவேற்பவை. துரித உணவுகளில் சுவைக்காகப் பயன்படுத்தப்படும்‚ மோனோ சோடியம் குளுட்டமேட் மற்றும் சோடா உப்பில் சோடியம் அதிகம். இது இளம் வயதிலேயே ரத்தக்கொதிப்பைக் கொண்டுவந்து விடும். உடலில் சோடியம் அதிகமானால், நீரின் அளவும் அதிகமாகும். சீக்கிரமே உடல் எடை அதிகரித்து, ஊளைச் சதை உருவாகும்.
துரித உணவுக் கடைகளில், பெரும்பாலும் பாமாயிலைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதை பலமுறை சூடுபடுத்தும்போது, இதிலுள்ள நிறைவுற்ற கொழுப்பு அமிலம், டிரான்ஸ் கொழுப்பாக மாறி, கெட்ட கொழுப்பு உடலில் சேர வழி அமைக்கிறது. இதனால் இதய நோய்கள் இளமையிலேயே வந்து ஒட்டிக்கொள்கின்றன. புரோட்டா, நாண், நுாடுல்ஸ் எல்லாமே மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு பென்சோயில் பெராக்சைடு சேர்த்து வெண்மையாக்கப்படுவதே மைதா. இந்த வேதிப்பொருள், புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தைக் கொண்டது. மைதாவை மிருதுவாக்கச் சேர்க்கப்படும் அலெக்சான், கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதித்து நீரிழிவுநோய்க்கு வழிவகுக்கக் கூடியது. இப்படி, துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள், நிறமூட்டிகள், மணமூட்டிகள் எல்லாமே ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பவை.
ஆரோக்கிய உணவு
மண் சார்ந்த, மரபு சார்ந்த உணவுகள்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. காலை எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக சுக்கு மல்லி காபி, பானகம்,கிரீன் டீ அல்லது லெமன் டீ குடிக்கலாம். காலையில் சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, உப்புமா,வெண்பொங்கல் நல்லது. அரிசிச் சோறு என்றாலே காண்பதற்கு அது வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மனதில் நிற்கிறது. அரிசியை வெண்மையாக்க, அதிக முறை பாலிஷ் செய்யப்படும்போது, அதிலுள்ள வைட்டமின்கள் உள்ளிட்ட பல சத்துகள் காலியாகி விடுகின்றன என்பதும், மாவுச்சத்து மட்டுமே மிஞ்சுகிறது என்பதும் பலருக்கும் தெரிவதில்லை.மதிய உணவில், வெள்ளை அரிசிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதுதான் ஆரோக்கியம் காக்கும் முதல்படி. அதற்குப் பதிலாக கைக்குத்தல் அரிசி சாதம், தினை அரிசி, எலுமிச்சை சாதம், வரகு சாதம், குதிரை வாலி சாதம், சீரக சம்பா பிரியாணி போன்றவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு சக்தி கிடைப்பதோடு ஆரோக்கியமும் மேம்படும்.
அசைவப் பிரியர்கள் நம் பாரம்பரிய நாட்டுக்கோழிக் குழம்பு, மீன் குழம்பு சாப்பிடலாம். சிக்கன் சில்லி, சிக்கன் ரோஸ்ட், கிரில் சிக்கன், மீன் ரோஸ்ட் என்று எண்ணெயில் வதக்கப்படும் உணவுகள் இதயத்துக்கு ஆகாதவை. இவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலை உணவைப் போலவே, இரவிலும் சிறுதானியங்களால் ஆன உணவுகளைச் சாப்பிடலாம். மாலை நேர ஸ்நாக்ஸை, வயது வித்தியாசமின்றி எல்லோரும் விரும்புகின்றனர். வடை, பஜ்ஜி, சமோசா, பீட்சா, பர்கர், சிப்ஸ், பாப்கார்ன்,பிஸ்கட்,கேக், பேக்கரி பண்டங்கள் போன்றவற்றுக்குப் பதிலாக வேர்க்கடலை,பொட்டுக்கடலை, எள்ளுருண்டை, கடலை மிட்டாய், அதிரசம், அவல் உப்புமா, அவல் பாயசம்,சுண்டல், பயறு வகைகள், பழ சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
உற்சாக உணவுகள்
கம்பு, கேழ்வரகு என்றாலே கூழ்; குதிரைவாலி என்றால் சோறு என்றுதான் பலரும் நினைக்கின்றனர். அப்படியில்லை. சிறுதானியங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்துக்கு உதவும் பல பதார்த்தங்களைச் செய்ய முடியும். கேழ்வரகு கொழுக்கட்டை, கம்பு இனிப்பு மாவு உருண்டை, குதிரைவாலி கிச்சடி, சிறுதானியங்களால் ஆன போளி, குழிப்பணியாரம், தேங்காய் பர்பி போன்றவை ஊட்டச் சத்து நிறைந்த உணவுகள். ஐஸ்கிரீமுக்குப் பதிலாக இளநீர் ஜெல்லி, குளிர்பானத்துக்கு மாற்றாக பானகம் அல்லது பழச்சாறு அருந்துவது உடலுக்கு ஊட்டமும், மனதுக்கு உற்சாகமும் தருபவை. அறிவியலில் நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும், ஆரோக்கியத்தைக் காக்கின்ற உணவுகளில் கவனம் செலுத்த வேண்டுமானால், நம் பாரம்பரிய உணவுகளைத் தேடிச் செல்வதே புத்திசாலித்தனம்.
நன்றி : Dr. கு.கணேசன்
மருத்துவ இதழியலாளர், ராஜபாளையம்