மதுரை
இரத்தச்சோகை சாதாரணமாகக் கடந்து விடக்கூடிய ஒரு பாதிப்பல்ல. சரியான நேரத்தில் கண்டறிந்து அதைச் சரிசெய்துவிடவேண்டும். காலம் கடந்தால் உயிரையே பறித்துவிடும் என எச்சரித்துள்ளது. இந்தியச் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம். 2018-2019-ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் கருவுற்ற பெண்களில் 34.6 சதவிகிதம் பேருக்கும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 48.5 சதவிகிதம் பேருக்கும் அனீமியா பாதிப்பு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 12 கிராம் முதல் 16 கிராம் வரை ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். 12 கிராமுக்குக் கீழ் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருந்தால் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். சோர்வு, பசியின்மை, சுவையின்மை, நகங்கள் உடைதல், முகம் மற்றும் நாக்கு வெளுத்துப் போதல், படபடப்பு, மூச்சுத் திணறல், முடி உதிர்தல் ஆகியவைஅனீமியாவின் பொதுவான அறிகுறிகள். ஆண்களைவிட பெண்களையே அனீமியா அதிகமாகப் பாதிக்கிறது.”
தமிழகத்திலும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. `2005-06 -ல் இதன் தாக்கம் 53.2 சதவீதமாக இருந்தது. 2015-16 ஆண்டில் 55 சதவீதமாக
உயர்ந்துள்ளது` என தேசிய குடும்ப சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. ரத்தச்சோகை அதிகரித்தால் படிப்பில் மந்தம், விளையாட்டில் ஆர்வமின்மை, கருத்தரிப்பதில் சிக்கல், கருக்கலைவு, குறைப்பிரசவத்தில் குழந்தை பிறத்தல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். அனீமியாபாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் கர்ப்பப்பை சுருங்கி விரியாமல் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.