headlines

img

குடியரசுத் தலைவர் உரை இந்துத்துவா நிகழ்ச்சி நிரலே “புதிய இந்தியா”

மோடி-2 அரசாங்கத்தின் தொலைநோக்குப்பார்வை மற்றும் முன்னுரிமைகள் எவை எவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வின்போது குடியரசுத்தலைவர் ஆற்றிய உரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தன் உரையில், இந்த அரசின் கொள்கை மற்றும் நோக்கங்கள் குறித்து வெளியே சொல்லியதைவிட சொல்லாமல் விட்டதே அதிகமாகும். கேலிக்கூத்தான முந்தைய கோஷம் குடியரசுத் தலைவர், முந்தைய அரசாங்கத்தைக் குறிப்பிடுகையில், “அனைவருடனும் அனைவருக்குமான” அரசாங்கமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இப்போது அது மேலும் ‘அனைவருடனும், அனைவருக்குமானதும் மற்றும் அனைவருக்கும் விசுவாசமான தாகவும்’  இருக்கும் என்று விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கோஷத்தை விரிவாக்கியதற்கான அவசியம் என்ன என்பது விளக்கப்படவில்லை. சென்ற ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வந்ததன் காரணமாக முன்பு எழுப்பிய கோஷம் கேலிக்கூத்தாகப் போய்விட்டது என்பதனால் இப்போது “புதிய இந்தியா” விற்கான கோஷத்தை மாற்றியிருக்கிறார்களா? இவ்வாறு கோஷத்தை மாற்றியதற்கான காரணம் எதுவாகவேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். நடைமுறையில் மோடி-2 அரசாங்கத்தின்கீழ், முஸ்லிம்கள் மீதான கும்பல் குண்டர்களின் தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன என்பதே உண்மையாகும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 22 வயது இளைஞரான தப்ரேஷ் அன்சாரி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்.

மவுனம் கடைப்பிடிப்பு குடியரசுத் தலைவர் உரை, இந்த அரசாங்கம் பின்பற்றவிருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் சம்பந்தமாக மவுனம் கடைப்பிடித்திருப்பது நன்றாகவே தெரிகிறது. தற்போது நிலவும் பொருளாதார மந்தத்தை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்பது குறித்து எதுவுமே கூறப்படவில்லை. விவசாய நெருக்கடியைப் பொறுத்தவரைக்கும், சென்ற பட்ஜெட்டின்போது, விவசாயிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக, அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி சம்மான் நிதி என்பது அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்பு இது, இரண்டு ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6,000 ரூபாய் கொடுக்கப்படும் என்றிருந்தது. இப்போது இதனை நிலம் எவ்வளவு இருந்தாலும் அதனைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்து விவசாயிகளுக்கும் என்று விரிவாக்கப்பட்டிருக்கிறது. எனினும் இதன்மூலமும் குத்தகை விவசாயிகளுக்கோ அல்லது விவசாயத் தொழிலாளர்களுக்கோ எவ்விதப் பயனும் இல்லாததால் இந்நடவடிக்கையும் ஒரு பிற்போக்கான நடவடிக்கையேயாகும். அள்ளி வீசப்படும் உறுதிமொழிகள் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, சுய வேலைவாய்ப்புக்கு அழுத்தம் கொடுத்திருப்பது தொடர்கிறது. முத்ரா கடன் அளிக்கும் திட்டம் 30 கோடி பேருக்கு விரிவாக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது.  குடியரசுத் தலைவர் தன் உரையில் 2024க்குள் உயர் கல்விக்காக மேலும் 2 கோடி இடங்கள் கூடுதலாக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம், படித்த வேலையில்லா இளைஞர்களின் பரிதாபநிலை மேலும் கூர்மையடைந்திடும்.  பெண்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் எண்ணற்ற உறுதிமொழிகள் அள்ளிவீசப்பட்டிருக் கின்றன. இவர்களின் மிகவும் முக்கியமான கோரிக்கையான, நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக உயர்த்துவதற்கு வகை செய்யும் சட்டமுன்வடிவு குறித்து குடியரசுத் தலைவர் உரை மவுனம் கடைப்பிடித்துள்ளது.

 மக்களவையில் இந்த அரசு பெரும்பான்மையைப் பெற்றிருக்கக்கூடிய இத்தருணத்தில் இதனைச் சொல்லாமல் விட்டிருப்பதற்கு எந்த சமாதானத்தையும் அவர்களால் சொல்ல முடியாது. அயல்துறைக் கொள்கை குறித்தும் போதுமான அளவிற்கில்லை. ‘அண்டைநாடுகள் முதலில்’ என்கிற கொள்கையின்படி தெற்காசியா மற்றும் ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் ‘வங்காளவிரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதாரக் கூட்டுறவிற்கான முன்னெடுப்பு’ (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation) என்கிற அமைப்பின்கீழ் வருகின்ற வங்கதேசம், பூடான்,  இந்தியா, மியான்மர், இலங்கை,  நேபாளம், தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், உலக அளவில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்த அரசின் உலகக் கண்ணோட்டம் என்ன? பாதுகாப்புவாதம் என்ற பெயரில் வர்த்தக யுத்தங்களை அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்டுள்ள சூழ்நிலையில், மேற்கு ஆசியாவையும் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளையும் அமெரிக்கா, ஆக்கிரமித்திடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், புவிவெப்பமயமாதல் கடும் பருவ நிலை மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கக்கூடிய சூழ்நிலையில், இவற்றைப்பற்றியெல்லாம் எதுவும் கூறாது குடியரசுத் தலைவர் உரை மிகவும் மவுனமாக நகர்ந்திருக்கிறது.

பொதுவாக குடியரசுத் தலைவர் உரையின்போது உலகின் பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகள் குறித்து சம்பிரதாயமான முறையில் சில கருத்துக்கள் கூறப்படும். ஆனால் இப்போதைய குடியரசுத்தலைவர் உரை அவ்வாறு எதுவும் கூறாமல் தாவி விட்டது. அமெரிக்காவின் இளைய பங்காளிகளில் ஒன்றாக மோடி அரசாங்கம் மாறிப்போனதால், நம் நாட்டின் நலன்கள் பாதிக்கப்பட்டாலும்கூட,  டிரம்ப் நிர்வாகத்திற்கு விரோதமாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணமா? குடியுரிமை எனும் சூழ்ச்சி இந்துத்துவா கண்ணோட்டத்தை மனதில் கொண்டுள்ள இந்த அரசாங்கம், அதன் அடிப்படையில், ‘தேசப் பாதுகாப்பு’க்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுத்திருப்பதை, குடியரசுத் தலைவர் உரை காட்டுகிறது. பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிடுவதுடன், குடிமக்கள் தேசியப் பதிவேடு மற்றும் மதத்தின் அடிப்படையில் ‘அந்நியர்கள்’ எனக் கருதப்படுபவர்களுக்கு குடியுரிமையை மறுக்கக்கூடிய விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த அரசாங்கம்  விரும்புகிறது. வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு – அதாவது, மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களுக்குள் ஊடுருவியவர்களுக்கு எதிராக முன்னுரிமை அடிப்படையில் குடிமக்கள் தேசியப் பதிவேடு பிரயோகிக்கப்படும்.  அஸ்ஸாமில் குடிமக்கள் தேசியப் பதிவேடு பயன்படுத்தப்பட்டுள்ள அனுபவமானது, பிரதானமாக முஸ்லிம்களைக் குறிவைத்து அது பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவர்கள் நம் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வந்தவர்களா, இல்லையா என்பதைப்பற்றி யெல்லாம் அது ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.  அதேபோன்று எல்லைகளுக்கு  அப்பாலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் முஸ்லிம்கள் அல்லாதவர் களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவது என்பதும், புலம் பெயர்ந்து  வந்துள்ள இந்துக்களையும் மற்றும்  இந்து அகதிகளையும் வென்றெடுப்பதற்கான ஒரு சூழ்ச்சியேயாகும். இந்நடவடிக்கைகள் அனைத்தும் வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் மிகவும் ஆழமானமுறையில் பாதிப்புகளை ஏற்படுத்திடும். மக்களின் இடையே மிகவும் மோசமான முறையில் மதவெறித் தீயை விசிறி விடும். காஷ்மீர் உரிமைகளை மேலும் நசுக்கவே... இதேபோன்றே ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒரு “பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழல்” அளித்திட உறுதிமொழி தந்திருப்பதும் மோடி அரசாங்கத்தின் பாசாங்குத்தனமான நிலையைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக அங்கே மத்திய அரசு கடைப்பிடித்து வந்த ராணுவ ஒடுக்குமுறைக் கொள்கைகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்து சீர்கேடு அடைய இட்டுச் சென்றதுடன், மாநிலம் முழுதும் தீவிரவாதமும்  மற்றும் அதற்கெதிரான நடவடிக்கைகளும் அதிகரித்திடவும் இட்டுச் சென்றுள்ளன. அங்கே இயங்கிடும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும், இயக்கங்களுடனும் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து ஒரு வார்த்தை கூட குடியரசுத் தலைவர் உரையில் இல்லை.  இப்போது உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில், ராணுவ நடவடிக்கைகள் மேலும் அதிகரித்திடும். இதற்கெதிராக, இப்போது அங்கே ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையிலிருந்து வெளியேற ஏதேனும் வழிகாணப்பட்டால் அதனைப் பரஸ்பரம் பேசி, ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாக மிதவாத ஹரியத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் உரையானது, காஷ்மீர் நிலைமை குறித்து, “அமைப்பை வலுப்படுத்திடவும், கூட்டுறவு கூட்டாட்சித்தத்துவத்தை உயர்த்திப்பிடித்திடவும்” (“strengthening the  system and spirit of cooperative federalism ) தயாராயிருப்பதாக உதட்டளவில் கூறியிருப்பினும்,  உண்மையில் இந்த அரசு ஆக்கப்பூர்வமாக எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்திருக்கிறது என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடப் போகிறோம் என்ற பெயரில் பல நடவடிக்கைகளை முன்மொழிந்திருக்கிறது. இது அங்கு வாழும் மக்களின் உரிமைகளை மேலும் நசுக்குவதற்கே இட்டுச் செல்லும். ஆபத்தான திருத்தங்கள் மத்திய அமைச்சரவை, தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத்திற்குப் பல்வேறு திருத்தங்களைச் செய்திட ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திருத்தங்களில் ஒன்று, மாநில காவல்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமலேயே, தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு, எம்மாநிலத்திலும் எவர்வீட்டிற்குள் வேண்டுமானாலும் சென்று சோதனையிடுவதற்கு, அதிகாரம் அளிக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டம் ஆகியவை மாநில காவல்துறையினரின் அதிகாரங்களை மீறிச் செயல்பட பலவிதங்களில் வாய்ப்புகளை அளித்திருக்கிறது. இப்போது முன்மொழியப்பட்டிருக்கிற திருத்தம் மாநிலங்களின் அதிகாரங்களை மேலும் அரித்து வீழ்த்திடும்.  ஒட்டுமொத்தத்தில், “புதிய இந்தியா” என்ற பெயரிலும், தேசப் பாதுகாப்பு என்ற பெயரிலும்,  பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் அமல்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

;