headlines

img

பிரதமர் மோடியின் ‘வழக்கமான’ பிரச்சாரம்   

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்டவாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட வாக்குப்பதிவு நவம்பர் 3 மற்றும் 7 ஆகியதேதிகளில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் மக்கள் ஓரளவு உற்சாகத்துடன் வாக்களித்துள்ளனர். 54 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. 

பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டதை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வழிமொழிந்தார். எனினும்பாஜகவின் இந்த வாக்குறுதி வாக்காளர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பீகார் தேர்தல் களத்தில் துவக்கம் முதலே ஐக்கிய ஜனதா தள- பாஜக கூட்டணி திணறி வந்தது. நிதிஷ்குமார் தலைமையிலான மாநில ஆட்சி மீதும், மோடி தலைமையிலான மத்தியஆட்சி மீதும் மக்களிடம் கடும் கோபம் எழுந்தது.தேர்தல் களத்திலும் இது எதிரொலித்தது. ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் கூட்டணியிலிருந்து கழற்றிக் கொண்டு தனித்துப்போட்டியிடுகிறது.  இதுவும் அந்த  கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தன்னுடைய ஆட்சியின் சாதனைகள் என்றோ, பீகார் மாநில அரசின் சாதனைகள் என்றோ எதையும் கூறமுடியாத பிரதமர் மோடி தன்னுடைய வழக்கமான மதவெறிபிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணியை துவக்கியிருப்பது தம்முடைய கட்சியின் சாதனை என்று அவர் பேசியிருப்பதன் மூலம் மக்களை மதரீதியாக பிரித்து மலிவான அரசியல் மூலம் வாக்கு அறுவடை நடத்த முயன்றிருக்கிறார். 

கடந்த ஐந்தாண்டுகளாக ஐக்கிய ஜனதாதள, பாஜக கூட்டணி ஆட்சிதான் நடந்துவந்தது. இந்த ஆட்சியில் பீகார் மாநிலம் கடுமையான சரிவை அனைத்துத் துறைகளிலும் சந்தித்தது. எனவே தன்னுடைய ஆட்சியைப் பற்றி பேசாமல், பிரதமர் மோடி பீகாரை வளர்ச்சிப் பாதையில்அழைத்துச் செல்வார் என்று முதல்வர் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.மோடி ஆட்சியில் இந்தியா தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில்தான் பயணித்து வருகிறது. பணமதிப்பு நீக்கம் மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியது. அடுத்து ஜிஎஸ்டி வரியினால் மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. மாநிலங்களின் வரி வருவாய் வஞ்சிக்கப்பட்டது. இதனால் பீகாரும் கடும் சரிவை சந்தித்துள்ளது. 

ஆனால் நிதிஷ்குமார் இதையெல்லாம் மறைத்து மோடி பீகாரை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வார் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார். மொத்தத்தில் பீகாரில் முச்சுத் திணறிக் கொண்டிருக்கும் ஐக்கிய ஜனதாதள, பாஜக கூட்டணியை தூக்கி நிறுத்த பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ் குமாரும் மேற்கொள்ளும் பிரச்சாரம் பரிதாபகரமான தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.