headlines

img

படிக்க வரும் மாணவரை விரட்ட ஒரு திட்டமா?

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அந்தக் கொள்கை குறித்து தொலைக்காட்சி களின் வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரை யாற்றியுள்ளார். புதிய கல்விக்கொள்கை மூலம் கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். உண்மையில் எந்தவொரு சிக்கலுக்கும் இந்தக் கொள்கை தீர்வுகாணவில்லை. மாறாக குறுகிய கால அடிப்படையில் மட்டுமல்ல. தொலைநோக்கு அடிப்படையிலும் இந்திய கல்வித்துறையை பின்னுக்குத் தள்ளுகிற வேலையைத்தான் இந்த கொள்கை செய்துள்ளது. நீண்ட நெடிய ஆலோசனைக்குப் பிறகு இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கும் நிலையில் மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமல் தானடித்த மூப்பாக  மத்திய அரசு இந்தக் கொள்கையை திணித்துள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் நடத்தப்படவும் இல்லை. இந்த  லட்சணத்தில் வேலை தேடுவோரை உருவாக்கா மல் வேலை அளிப்பவர்களை உருவாக்குவதாக இந்தக் கொள்கை அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி வாய்ப்பந்தல் போடுகிறார். மாணவர்களின் இடைநிற்றலை இந்தக் கொள்கை குறைக்கும் என்கிறார் பிரதமர். ஆனால் அடுத்தடுத்த பொதுத் தேர்வுகள், மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தித் திணிப்பு, நடைமுறை வாழ்வோடு எந்தவகை யிலும் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்ட சமஸ்கிருத மொழி திணிப்பு என்பதோடு மட்டு மின்றி பட்டப்படிப்புகளில் எந்தவொரு வகுப்பி லும் விலகிக்கொள்ளலாம் என்ற அறிவிப்புகள் மூலம் ஏழை-எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவர் களை கல்வியிலிருந்து விரட்டும் திட்டமாகவே இது அமைந்துள்ளது. மாணவர்களுக்கான வழி சிறிய பாதையாக இல்லாமல் பல நுழைவு வாயில்களை கொண்ட தாக இருக்கும் என்கிறார் பிரதமர். ஆனால் ஆர்வத்தோடு கல்விகற்க வந்தாலும் அவர்கள் பாதியிலேயே வெளியேறும் பல வாயில்களைக் கொண்டதாகவே இந்தத் திட்டம்அமைந்துள்ளது.

 கலை அறிவியல் பாடங்களுடன் தொழிற் கல்வி என்பது மறைமுகமாக குலக்கல்வியை திணிக்கும் திட்டமாகவே உள்ளது. இந்தியாவில் சாதிக்கும், தொழிலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அனைவருக்கும் பொதுவான கல்வி என்பது அந்தத் தொடர்பை கொஞ்சம் துண்டித் திருந்த நிலையில் மீண்டும் சாதி அடிப்படை யிலான தொழில் என்ற கேடுகெட்ட வர்ணாசிரம அடுக்குமுறையை நவீனம் என்கிற பெயரில் திணிக்க முயல்கிறது இந்தக் கொள்கை. கல்வித்துறையை மாநிலங்களிடமிருந்து முற்றாக பறிக்கிற இந்தத் திட்டம் தன்னார்வலர்கள் என்கிற பெயரில் ஆர்எஸ்எஸ் கையில் நாட்டின் கல்வித்துறையை கொடுக்கும் ஏற்பாடாகவே உள்ளது. இந்தக் கொள்கை மட்டும் நடை முறைக்கு வருமானால் இந்தியா பல நூற்றாண்டு கள் பின்னுக்குப் போகும். எப்பாடுபட்டேனும் இதை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் இருக்கிறது.

;