headlines

img

எதேச்சாதிகாரம் வலுவாகி இருக்கிறது - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

கோவிட்-19 தொற்று, மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளை மேலும் தீவிரமான முறையில் வலுப்படுத்தி இருக்கிறது. 2014 மே மாதத்தில் மோடி அரசாங்கம் அமைக்கப்பட்டதுமே எதேச்சாதிகாரப் போக்கு துவங்கிவிட்டது. அதன்பின்னர் 2019 மே மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்பு, அது கெட்டிப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் இந்த ஓராண்டு காலத்தில், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று உருவாக்கி இருக்கக்கூடிய அதீதமான சூழ்நிலையை அவர்கள் தங்கள் எதேச்சாதிகார ஆட்சியை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொரானா வைரஸ் தொற்று இந்தியாவை முழு வீர்யத்துடன் தாக்குவதற்கு முன்பே, அரசாங்கம் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான கிளர்ச்சிகளை நசுக்குவதில் மும்முரமாக இருந்தது. சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபின்னர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், அரக்கத்தனமான சட்டங்களைப் பயன்படுத்துதல், சிறுபான்மையினர், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் குரல்களைக் குறிவைத்துத் தாக்குதல் முதலானவை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. 

அமித் ஷாவின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் தில்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது  அறிவுறுத்தும் விதத்தில் கடுமையான படிப்பினையை அளிக்கிறது. முதலாவதாக, தில்லிக் காவல்துறை, வடகிழக்கு தில்லியின் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக, முஸ்லீம் இளைஞர்களைச் சுற்றிவளைத்துக் கைதுசெய்து, அவர்கள் எவ்விதமான சட்டரீதியாக நடவடிக்கைகளும் எடுக்க முடியாதவிதத்தில், சிறையில் அடைத்திருக்கிறது. அதே சமயத்தில், பாஜக தலைவர் கபில் மிஷ்ரா தொடங்கி வைத்து, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு அடையாளம் காட்டப்பட்ட கயவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், காவல்துறையினர் மிகவும் நயவஞ்சகமான முறையில், வடகிழக்கு தில்லி வன்முறை வெறியாட்டங்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தமே இல்லாத, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் குறிவைத்துக் கைது செய்திருக்கிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், ஜமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 27 வயது எம்.பில். மாணவி, சபூரா சர்கார் என்பவரும் ஒருவர். அவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் ஒரு கர்ப்பிணி என்பதைக்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும் ஜமியா மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள்.

கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக்கொண்டு முஸ்லீம் விரோதப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களையும்கூட இந்த அரக்கத்தனமான சட்டங்கள் விட்டுவைக்கவில்லை. தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், சபருல் இஸ்லாம் கான், மீது தேசத்துரோகக் குற்றப் பிரிவான இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பாஜக விரும்பாத விதத்தில் ஒரு பதிவை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஏற்றி இருந்ததுதான், அவர் செய்த ‘குற்றம்’ ஆகும்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் மிகவும் புகழ்பெற்ற, ஆனந்த் டெல்டும்டே மற்றும் கவுதம் நவ்லகா போன்ற  அறிவுஜீவிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களும், பீமா கொரேகான் வழக்கில் வன்முறையைத் தூண்டியதாகப் பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொரானா வைரஸ் தொற்றால் சிறையில் ஜனநெருக்கடியைத் தவிர்க்கும்பொருட்டு சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்கூட, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு, அத்தகைய சலுகைகள் அளிக்கப்படவில்லை.  

கொரானா வைரஸ் தொற்று இப்போது பரவலாக மாறியிருக்கிறது. இது பரவலாக மாறுவதற்கு முன்பேயே இவ்வாறு  தேசத் துரோகக் குற்றப்பிரிவு பயன்படுத்தப்படுவது மிகவும் விரிவானமுறையில் மாறியிருந்தது. இதிலிருந்து, அரசியல் ஊழியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், இதழாளர்கள் என எவரும் விட்டுவைக்கப்படவில்லை.

ஊடகங்களைப் பணியவைத்திட வேண்டும் என்பது எதேச்சாதிகார ஆட்சியின் லட்சியங்களில் ஒன்றாகும். சமூக முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்புகூட பிரதமர், ஊடக உரிமையாளர்கள் மற்றும் எடிட்டர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர்களிடம் அரசுக்கு ஆதரவாகத்தான் செய்திகளை முன்வைக்கவேண்டுமேயொழிய, அரசுக்கு எதிராகவோ அல்லது வதந்திகளையோ கூறக்கூடாது என்று கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இத்தகைய கட்டளைகளைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடும் விதத்தில் (தி ஒயர் இணைய இதழின் தலைமை எடிட்டருக்கு எதிராகப் பதிவு செய்திருப்பதைப் போல), குஜராத் செய்திகள் நிறுவனம் (Face of Nation) ஒன்றின் உரிமையாளரும், எடிட்டருமான தாவல் பட்டேல் என்பவருக்கு எதிராகத் தேசத் துரோகக் குற்றப்பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் செய்த ‘குற்றம்’, அவர் தன் பத்திரிகையில் குஜராத் முதல்வர் ரூபானி, மாநிலத்தில் கொரானா வைரஸ் தொற்றை முரட்டுத்தனமாகக் கையாண்டதற்காக மாற்றப்படக்கூடும் என்று செய்தி வெளியிட்டிருந்ததேயாகும். சென்ற மாதம், காஷ்மீரில் இரு இதழாளர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சமூக முடக்கம் அமல்படுத்தப்படும் விதம் குறித்து எவ்விதமான விமர்சனமும் தடைசெய்யப்படும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. பொது விநியோக முறையின்கீழ் நடைபெற்றுள்ள அரிசி ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததற்காக அஸ்ஸாமில் கோலாகாட் மாவட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கிற்காக எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

மோடி பாணி எதேச்சாதிகாரம் நாட்டில் சுதந்திரமாக இயங்கும் அனைத்துவகை நிறுவனங்களையும் அழித்து ஒழித்திட வேண்டும் என்று கோருகிறது. இதில் இவர்களுக்குக் கிடைத்திருக்கிற ஆபத்தான வெற்றி என்பது, உயர்நீதித்துறையையே இவர்கள் தங்கள் வழிக்குக் கொண்டுவந்திருப்பதாகும். உயர்நீதித்துறை ஆட்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு  எவ்விதான எதிர்ப்பும் தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மேலும் மேலும் மாறிக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் 4ஜி தொழில்நுட்பம் மறுக்கப்பட்டிருப்பதன் மீது சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு இதற்கு ஓர் உதாரணமாகும். குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திட உச்சநீதிமன்றமே முன்வர விரும்பாத நிலையில், மோடி அரசாங்கம் தன் கொடூரமான கொள்கைகளை ஒரு சட்டத்தின் உறைக்குள் கட்டிவைப்பது என்பது சாத்தியமாகிறது.

கொரானா வைரஸ் தொற்று எதேச்சாதிகாரத்தின் மற்றுமொரு நச்சு அம்சத்தையும் முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறது. அதாவது, அரசமைப்புச்சட்டத்தில் உள்ள மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சித் தத்துவத்தை ஒழித்துக்கட்டிவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் குவித்துக்கொண்டு ஒரு மத்தியத்துவப்படுத்தப்பட்ட-அதிகாரவர்க்க ஆட்சியை அமல்படுத்துவதை நோக்கி, சென்று கொண்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளில் எஞ்சியிருக்கக்கூடியவைகளைக்கூட படிப்படியாக மீறியும், மாநிலங்களை நிதி திவால்நிலைக்குள் தள்ளுவதுடன், தன் கட்டளைகளின் அடிப்படையில் இயங்கும்விதத்தில் கொண்டு வரவும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் ஐந்து முறை காணொளிக் காட்சி மூலமாகக் கூட்டத்தை நடத்தியபின்பும், ஒவ்வொரு கூட்டத்திலும் முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களுக்கு நிதித் தொகுப்பை அளிக்க வேண்டும் என்று கோரியிருந்த போதிலும், தங்கள் மாநிலத்திற்குத் தரப்பட வேண்டிய நிலுவைத்தொகைகளை அளித்திட வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தபோதிலும், மற்றும் சுலப தவணைகளில் தங்கள் கடன் வாங்கும் தொகையின் வரம்பை அதிகரித்திட வேண்டும் என்று கோரியிருந்தபோதிலும் இவற்றில் எதையும் அவர் செய்துதர மறுத்திருக்கிறார்.  மத்திய அரசு, மாநில அரசுகள் அனைத்தும் தங்களின் கருணையின் கீழ் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. கொரானா வைரஸ் தொற்றை சமாளிக்கும் பிரச்சனையில் கூட என்ன நிலைமை? சுகாதாரம் மாநிலப் பட்டியலில் வரக்கூடிய ஒரு பிரச்சனை என்பது தெளிவான ஒன்று. இதிலும்கூட, மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான முறையில், மாநிலங்களின் அதிகாரங்களை மிதித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறது.

பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ளும் விதம், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டும் விதத்தில் அவசரச் சட்டங்களைக் கொண்டுவர சில மாநில அரசாங்கங்களை ஊக்குவித்திருக்கும் விதம், “விரும்பத்தகாத” நபர்களை வேட்டையாடும் விதத்தில் உளவு ஸ்தாபனங்களைக்கொண்டு கண்காணிப்புகளை மேற்கொள்ளுதல் – ஆகிய அனைத்தும் நாட்டு மக்கள் வரவிருக்கும் காலங்களில் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்களை சூசகமாகத் தெரிவிக்கின்றன.

கொரானா வைரஸ் தொற்று பிரச்சனை முடிந்தபின்னரும், மேற்கொண்ட ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் எதுவும் திரும்பப் பெறப்படப் போவதில்லை என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்து நமக்கு நன்றாகத் தெரியும். இத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், கட்டமைப்பதும் எதேச்சாதிகார ஆட்சிகளின் இயல்புதான். இருபத்தோராம் நூற்றாண்டை, இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவோம் என்று சமீபத்தில் மோடி பீற்றிக்கொண்டதும், இந்தியாவை சுயசார்பு நாடாகக் கட்டி எழுப்புவோம் என்று கூறியதும் கூட, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான, பிபிசிஎல் என்னும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை, அந்நிய நிறுவனம் ஒன்றிற்குத் தாரைவார்க்க முடிவு செய்தபின்பு, இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்றியமைத்து வரும் நிலையில்,  எதார்த்தத்திற்கு எதிரான கூற்றுகளேயாகும்.

இந்துத்துவா எதேச்சாதிகார வண்டி நாட்டை அடிமைப்படுத்துவதை நோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்திட விரும்பும் அனைவரின் முன்பும் உள்ள கடமை மிகவும் தெளிவான ஒன்றே. கோவிட் நெருக்கடிக்குக் பின்னர், மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, அவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு எதிராக, ஒரு சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவற்றுக்கு எதிராக அலை அலையாகக் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிட வேண்டும்.

(மே 13, 2020)

(தமிழில்: ச.வீரமணி)

 

;