headlines

img

உண்மையை ஏற்றுக்கொண்டு உருப்படியாக பேசுங்கள்!

பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாகவும் வராக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முதலாளிகளுக் கான சலுகைகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சி கள் கூறுகிற தகவல்களும் விபரங்களும் பொய்யானவை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்திருக்கிறார்.

வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாக தேசிய மாதிரி சர்வே அமைப்பு அளித்துள்ள விபரங்களே தவறானவை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் வேலைதருவோம் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என்று ஒரே போடாக போட்டிருக் கிறார் ரவிசங்கர் பிரசாத். 

ஆட்டோமொபைல் துறை உட்பட அனைத்து துறைகளிலும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து கடந்த சில மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3.5லட்சம் பேரின் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன; அவர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வீதியில் நிற்கிறார்கள். இந்த உண்மையை கண்திறந்து பார்ப்பதற்கு மோடி அரசு பலவந்தமாக மறுத்து வருகிறது. இதுதொடர்பாக உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக தலைகீழ் திசையில் பயணித்துக் கொண்டிருக் கிறது.

பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு - குறிப் பாக ஆர்எஸ்எஸ்-பாஜகவின் நெருக்கமான நண்பர்களாக இருக்கக்கூடிய கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு மிக மிக அதிகபட்ச சலுகை களை இந்தக் குறிப்பிட்ட சில மாதங்களில் வாரி வழங்கியிருக்கிறது மோடி அரசு. 

ரவிசங்கர் பிரசாத், தேசிய மாதிரி சர்வ அமைப்பின் பல்வேறு புள்ளி விபரங்களை பொய் என்று சொல்லிவிட்டுப் போகட்டும்; அவருக்கு வேறொரு புள்ளி விபரம் பதிலடி கொடுக்கிறது. சிஎன்என் - நியூஸ் 18 ஊடகம், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு ரிசர்வ்  வங்கி மிக சமீபத்தில் அளித்திருக்கிற விபரங் களே, பாஜக ஆட்சியாளர்களின் முகத்திரையை கிழிக்கிறது. 2019 மார்ச் 31 விபரத்தின்படி, பொதுத் துறை வங்கிகளில் ரூ.100கோடி முதல் ரூ.500 கோடி வரையிலான பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கடன்கள் ரூ.2.75லட்சம் கோடி அளவிற்கு தள்ளு படி செய்யப்பட்டிருக்கின்றன; ரூ.500 கோடியும் அதற்கு மேலும் வாங்கப்பட்ட கடன்களும் வராக் கடன்கள் என்று பட்டியலிடப்பட்டு நடப்பு நிதிக் காலாண்டில் ரூ.67,600 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட காத்திருக்கிறது. 

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மீது மிகக் கடுமையான முறையில் ஜிஎஸ்டி, செஸ் வரிகள் உள்ளிட்டவை மூலம் கொடூரத் தாக்குதலை நடத்தி அந்தத் தொழில்களை நிலைகுலையச் செய்து, அதில் வேலைபார்த்து வந்த லட்சக்கணக் கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்த அரசு, நாடே நெருக்கடியில் தவிக்கிறது என்று கூறிக்கொண்டே, இந்த நெருக்கடி தரு ணத்திலும் கூட பெரும் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு கடன் தள்ளுபடி உள்பட சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. எனவே உண்மையை மறைக்க முயலாமல், வேலைவாய்ப்பை உருவாக்கவும் நெருக்கடியை தீர்க்கவும் உருப்படி யாக ஏதேனும் செய்யட்டும் மோடி அரசு. 

;