headlines

img

வதந்தி அல்ல வாதை!

சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சிகளால் பொய்யான தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.  சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளால் இட்டுக்கட்டி கூறப்படும் பொய் அல்ல என்பதை மக்கள் படும் பாட்டிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். சென்னை மாநகரத்தின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியமே முழு காரணம். சென்னை பெரு நகரப் பகுதிகளில் 1350 மி.மீ. மழை பெய்திருக்கிறது. அதாவது 330 டி.எம்.சி. சென்னையின் ஒரு மாத தண்ணீர் தேவையே 1 டி.எம்.சி.தான். இவ்வளவு தண்ணீரை வீணடித்துவிட்டு நாம் வறட்சி என்று சொல்வது ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் எழுப்பியுள்ள கேள்வி நியாயமானதுதானே. 

பருவநிலை மாற்றத்தால் மழை மற்றும் வெயில் மாறி மாறி ஏற்படும்போது மாநிலத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கவும் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்கவும் முன் ஏற்பாடு ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசர ஆலோசனைகள் நடத்துவதும் எதிர்க்கட்சிகளை திட்டுவதும் நிலைமையை சீராக்கிவிடாது.  தயவு செய்து சென்னைப் பக்கம் வந்துடாதீங்க  என வெளியூரில் வசிக்கும் உறவுகளுக்கு சென்னை வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ள னர் என்று செய்திகள் வெளியாகின்றன. காலி வீடு கிடைக்காத நிலை மாறி, எங்கு பார்த்தாலும் வீடு வாடகைக்கு என்ற பலகையும் தொங்குகிறது என்றும் செய்திகள் கூறுகின்றன. இவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் வெறும் புரளி அல்ல, சென்னையின் நடப்பு நிகழ்வுகள்.

ஹோட்டல்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாக கூறுவதை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் கூறுகிறார். அதுமட்டுமின்றி ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீட்டி லேயே வேலைபார்க்க சொல்வது ஏற்கெனவே நடந்து வருகிறது. அது தண்ணீர் பற்றாக்குறை யால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு அல்ல என்று அமைச்சர் வேலுமணி கூறுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறுவதைப் போல் உள்ளது.  சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று சென்னை  உயர்நீதிமன்றம் ஒரு மனு மீதான விசாரணையின் போது கூறியுள்ளது.  எனவே தண்ணீர்ப் பற்றாக்குறையை போக்குவது, நிலத்தடி நீரை பாதுகாப்பது, மழை நீரை சேகரிப்பது போன்ற நீண்டகால திட்டங்களோடு தொடர்புடையவை ஆகும். ஆனால் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதில், ஆட்சியை நீடிக்கச் செய்வதில் காட்டும் அக்கறையை நீர் வளத்தை பாதுகாப்பதில் சிறிதளவாவது செலுத்துவதே தமிழக ஆட்சியாளர்களின் கடமையாகும். 

;