headlines

img

ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, பாஜகவினர் அவர் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். அவர் பேசிய மேடையை நோக்கி முட்டை, காலணி வீசப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆதரவுடன் பாஜக வன்முறை கலாச்சாரத்தை உருவாக்கி வருவதன்விளைவே இந்த நிகழ்வுகளாகும். இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்திருப்பதாக தெரிவித்திருந்தபோதும் இதை தூண்டிவிட்ட பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மன்னார்குடி ஜீயர் செண்பகமன்னார் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மகாத்மா காந்தி படுகொலையில் தொடர்புடைய கோட்சே குறித்து கமல்ஹாசன் வெளியிட்டகருத்திற்காக அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இந்த கருத்தை ஆதரிக்கிறேன்; கட்டாயம் கமல்ஹாசனின் நாக்குஅறுக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் ஆகியோர் வன்முறையை தூண்டுவதாக காவல்துறை குறைந்தபட்சம் வழக்குக் கூட பதிவு செய்யவில்லை. இந்த துணிச்சலில் தான் பொதுக்கூட்ட மேடைகளில் நேரடியாக தாக்குதல் தொடுக்க பாஜக மற்றும் இந்து முன்னணியினர் துணிந்துள்ளனர்.பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவும் கமல்ஹாசனுக்கு எதிராக அவரது கட்சியினரை தொடர்ந்து தூண்டி விட்டு வருகிறார். இதன் விளைவு தான் தமிழகத்திலும் வன்முறை கலாச்சாரத்தை உருவாக்க முயல்பவர்கள் நடத்தி வரும்தாக்குதலாகும். இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை தமிழகம் கண்டித்தாக வேண்டும். தேர்தல் உறவு மட்டுமின்றி பாஜகவுடன் அதிமுகவைச் சேர்ந்த சிலருக்கு சித்தாந்த உறவும் ஏற்பட்டிருப்பதன் விளைவை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மன்னார்குடி ஜீயர், வி.எச்.பி. தலைவர் வேதாந்தம் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கவிடாமல் காவல்துறையின் கையை கட்டிப் போட்டிருப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. மோடி ஆட்சியால் முட்டுக் கொடுக்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகஅரசு ஊழலில் உலக சாதனை படைத்துவருகிறது. நிர்வாகத்திறன் இன்மையால் தமிழகம் தொடர்ந்து சரிவை சந்திக்கிறது. முதுகெலும்பற்ற இவர்களால் மோடி ஆட்சியின் வன்மம் கலந்து வஞ்சகத்திலிருந்து தமிழகத்தை பாதுகாக்க முடியவில்லை. இந்த காரணங்களால் இந்த அரசுஅகற்றப்பட வேண்டும் என்பதோடு வன்முறை கலாச்சாரத்திற்கு துணை நிற்பதாலும் இந்த அரசு அகற்றப்பட வேண்டும்.மே 19-இல் நான்கு தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரிப்பதன் மூலம் மாநிலத்தில் நடைபெறும் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். இந்த அரிய வாய்ப்பை இந்த தொகுதிகளின் வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

;