headlines

img

நீண்டுகொண்டே போகும் நீட்....

கடுமையான எதிர்ப்புக்கும், சர்ச்சைகளுக்கும் இடையே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.. பிஏஎம்எஸ்., பிஎஸ்எம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படு
கிறது. இந்த தேர்வுகளை முற்றாக ரத்து செய்து அந்தந்த மாநிலங்கள் மருத்துவ மாணவசேர்க்கையை முடிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ள நிலையில், பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி வாழ்வியல் அறிவியல் படிப்புகளுக்கும் நீட்தேர்வு அவசியம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

தகுதி, திறமை என்ற பெயரில் நடத்தப்படும் நீட் தேர்வுகள் ஒரு பெரும் கொள்ளையாக மாறியுள்ளது. மாநில பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்கள் தாய்மொழி வழியில் படிக்கும் மாணவர்கள் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை மறுக்கும் வகையிலேயே நீட் தேர்வு அமைந்துள்ளது. இந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய போதும், மத்திய அரசு இதை கண்டுகொள்ள மறுக்கிறது.

இந்தப் பின்னணியில் நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்பது அனைத்து வகையான கல்வியையும் மாநில அரசுகளிட மிருந்து பறித்து மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் பெரும் சதி என்று கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் உயர்கல்வி வாய்ப்பினை பெரும்பகுதி மாணவர்களுக்கு மறுக்கும் திட்டமாகவே நீட் தேர்வு உள்ளது.நீட் தேர்வு மையங்கள் என்பது மாணவர்களைச் சுரண்டும் கொள்ளை மையங்களாக உருவெடுத்துள்ளன. பல லட்ச ரூபாய் செலவு செய்பவர்கள் மட்டுமே மருத்துவக் கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியது முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் தோல்வி அடைந்துள்ளது.

எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பிஎஸ், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோ மருத்துவப் படிப்புகளையும் இந்த முறைக்குள் கொண்டுவந்த மத்திய அரசு தற்போது நர்சிங் மற்றும் வாழ்வியல் அறிவியல் படிப்பையும் இந்த விஷ சூழலுக்குள் தள்ளியுள்ளது. நர்சிங் படிப்பவர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட விளிம்புநிலை பகுதியை சேர்ந்தவர்கள்தான். குறிப்பாக பெண்கள்தான் அதிகமாக இந்தப் படிப்பை படித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு என்பது முற்றிலும் நியாயமற்றது. மாணவர்களை மனச்சோர்வுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும், ஆளுமைச் சிதைவுக்கும் உள்ளாக்கும் நீட் தேர்வு முறையை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டே செல்வது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் நீட்சியே ஆகும். எனவே நர்சிங் உள்ளிட்ட எந்தப் படிப்புக்கும் நீட் தேர்வு தேவையில்லை என்ற போராட்டக்குரல் ஓங்கி ஒலித்திட வேண்டும்.
 

;